உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சண்டூர் - தனி தொகுதி: பா.ஜ., ஒற்றுமையால் தாக்கு பிடிக்குமா காங்கிரஸ்?

சண்டூர் - தனி தொகுதி: பா.ஜ., ஒற்றுமையால் தாக்கு பிடிக்குமா காங்கிரஸ்?

கனிம சுரங்க தொழிலுக்கு பெயர் பெற்றது பல்லாரி மாவட்டம். ஒரு காலத்தில் பா.ஜ., கோட்டையாக இருந்தது. ரெட்டி சகோதரர்கள் பல்லாரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால், ஜனார்த்தன ரெட்டி கனிம சுரங்க வழக்கில் சிறைக்கு சென்று வந்தபின், பல்லாரியில் பா.ஜ., செல்வாக்கு குறைந்தது.

* காங்., ஆதரவு

பல்லாரியில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில், சண்டூரை தவிர மற்ற ஐந்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பா.ஜ., மாறி மாறி வெற்றி பெறுகின்றன. ஆனால் சண்டூர் - தனி தொகுதியில் மட்டும், இதுவரை பா.ஜ., வெற்றி பெற்றதே இல்லை.கடந்த நான்கு தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நான்கு முறையும் துக்காராம் வெற்றி பெற்றார். இத்தனைக்கும் அவர் பெரிய அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர் இல்லை.தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் அலுவலகத்தில் கணக்காளராக வேலை செய்தவர். எளிமையான குணம் கொண்டவர், மக்கள் எளிதில் அணுக கூடியவர் என்பதால் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றார்.

* எம்.பி.,

சில மாதங்களுக்கு முன்பு நடந்த பல்லாரி லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டிட்டு வெற்றி பெற்று எம்.பி., ஆனார். இதனால் அந்த தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் துக்காராம் மனைவி அன்னபூர்ணா போட்டியிடுகிறார்.ஆனால், துக்காராம் குடும்பத்திற்கு சீட் கொடுக்க கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி மனைவிக்கு சீட் வாங்கி கொடுப்பதில் துக்காராம் வெற்றி பெற்றார்.வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் அன்னபூர்ணா கூறுகையில், ''சண்டூர் காங்கிரசில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். இம்முறையும் வெற்றி பெறுவோம்,'' என்றார்.ஆனால், உண்மையில் அங்கு நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. அன்னபூர்ணாவுக்கு ஆதரவாக உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பிரசாரம் செய்ய வரவில்லை. துக்காராம் மட்டும் மனைவிக்காக பிரசாரம் செய்கிறார்.சண்டூர் தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் சந்தோஷ் லாட் வரும்போது மட்டும், அனைவரும் ஒற்றுமையாக இருப்பது போல் காண்பித்து கொள்கின்றனர். பா.ஜ., வேட்பாளராக பங்காரு ஹனுமந்த் போட்டியிடுகிறார். ஒருமுறை கூட வெற்றி பெறாத தொகுதியில் இம்முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில், பா.ஜ., தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்படுகின்றனர். இதனால், இம்முறை சண்டூரில் காங்கிரஸ் தாக்கு பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. -- -நமது நிருபர் - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ