உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹஜ் யாத்திரைக்கான முன்பதிவு; மீண்டும் துவக்குகிறது சவுதி அரசு

ஹஜ் யாத்திரைக்கான முன்பதிவு; மீண்டும் துவக்குகிறது சவுதி அரசு

புதுடில்லி : புனித ஹஜ் யாத்திரையில், தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் வாயிலாக செல்லும், 10,000 இந்திய யாத்ரீகர்ளுக்கு முன்பதிவு இணையதளத்தை மீண்டும் திறக்க சவுதி அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.முஸ்லிம் மக்களின் ஆன்மிக கடமைகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஹஜ் யாத்திரை, இந்தாண்டு ஜூன் 4 முதல் 9 வரை நடக்கிறது.இந்தியாவில் இருந்து, 1.75 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹஜ் கமிட்டி வாயிலாக பயணம் மேற்கொள்கின்றனர். மீதமுள்ள, 30 சதவீதம் பேர் தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் வாயிலாக புனித பயணத்தை மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், மினா பள்ளத்தாக்கில் இந்திய தனியார் ஹஜ் சர்வீஸ்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தங்குமிட மண்டலங்களை சவுதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ரத்து செய்தது. முன்பதிவுக்கு அறிவிக்கப்பட்ட நேரத்திற்குள் தனியார் பயண ஏற்பாட்டாளர்கள், அதை முன்பதிவு செய்ய தவறியதால் இந்த இடங்களை மற்ற நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது.இதன் விளைவாக, 52,000 இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு மினாவில் தங்குமிடம் உறுதி செய்யப்படாத நிலை ஏற்பட்டது. இது அவர்களின் ஹஜ் யாத்திரையை கேள்விக்குறியாக்கியது.இது தொடர்பாக மத்திய அரசு தலையிட்டு, சவுதி அரசுடன் பேச்சு நடத்தியது. அதை தொடர்ந்து, இந்திய தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள், 10,000 இடங்களை முன்பதிவு செய்வதற்காக, ஹஜ் யாத்திரை இணையதளத்தை மீண்டும் திறக்க சவுதி அரசு ஒப்புக் கொண்டுள்ளது.இந்த முறை காலதாமதமின்றி குறிப்பிட்ட நேரத்திற்குள் முன்பதிவை முடிக்கும்படி தனியார் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Amar Akbar Antony
ஏப் 16, 2025 12:25

ஹஜ் யாத்திரை ஒரு இஸ்லாமியரின் வாழ்வில் மிக மென்மையான, புனிதமான யாத்திரை. இதில் முக்கியமான ஒன்று என்னவெனில் ஹஜ் யாத்திரை செய்வதற்கு உண்டான செலவை ஒரு ஏழை பெண்ணின் திருமணத்திற்கு செலவு செய்தால் அந்த யாத்திரை சென்றதற்கு சமம். மேலும் ஏழை இஸ்லாமியரின் கல்விக்கும் வைத்திய செலவிற்கும் அந்த பணம் உதவுமாயின் இறைவன் ஆசிகள் உதவுபவர்க்கு கிடைக்கும். ஆனால் இன்று ஹஜ் பலருக்கு பெருமைப்படும் நிகழ்வாக போயுள்ளது. எனினும் யாத்திரை செல்பவர்களுக்கு நல்ல அருளாசிகள் கிடைக்கட்டும். அரசின் உதவி பாராமல் இருக்கும் வக்பு சொத்துக்களின் முறையான வருமானம் இருந்திருந்தால் அணைத்து இஸ்லாமியர்க்கும் பயன்பாட்டிற்கும்.. இனியாவது நல்லது நடக்கட்டும்.


INDIAN
ஏப் 16, 2025 13:11

உங்களது கருத்து நல்ல ஆழமான கருத்து தான். இருப்பினும் அங்கு சென்று சிறப்புவாய்ந்த அந்த இடங்களை காணும் போது மனதில் ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அதிகமான பொருளாதார செலவுகள் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் போன்ற எல்லாவற்றையும் தாங்கி கொண்டு செல்வது மேலான இறைவனின் அருளையும் பொருத்தத்தையும் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த புனித பயணம்.


முக்கிய வீடியோ