சிம்ஹாவுக்கு சீட்? பிரியங்க் பாய்ச்சல்
கலபுரகி, : ''தேச துரோகி பிரதாப் சிம்ஹாவுக்கு சீட் கொடுப்பது பா.ஜ.,வின் முடிவு,'' என்று, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறி உள்ளார்.கர்நாடகா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே, கலபுரகியில் நேற்று அளித்த பேட்டி:மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கு, லோக்சபா தேர்தலில் 'சீட்' கிடைக்காது என்று சொல்கின்றனர். அவருக்கு சீட் கிடைக்குமா, கிடைக்காதா என்பது பற்றி என்னிடம் தகவல் இல்லை. பார்லிமென்டில் அத்துமீறி புகுந்தவர்களுக்கு, பிரதாப் சிம்ஹா பாஸ் கொடுத்து உள்ளார். தேச துரோகியான அவருக்கு, சீட் கொடுப்பது பா.ஜ., வின் முடிவு.பாஸ் கொடுத்தது எதற்கு என்று கேட்டால், சாமுண்டீஸ்வரியிடம் போய் கேளுங்கள் என்கிறார். எனக்கு ஏன் சீட் கொடுக்கவில்லை என்று பிரதாப் சிம்ஹா கேட்டால், சாமுண்டீஸ்வரியிடம் போய் கேளுங்கள் என்று, பா.ஜ., தலைவர்கள் சொல்ல போகின்றனர்.பா.ஜ., - எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே தனது மனநிலையை இழந்து விட்டார். இதனால் அவரை பற்றி பேச ஒன்றும் இல்லை. சக்ரவர்த்தி சுலிபெலே காசு வாங்கி கொண்டு பேசுபவர். அவரை பற்றி பேசினால், எனக்கு தான் நேர விரயம். கிராம பஞ்சாயத்து தேர்தலில் நின்று, வெற்றி பெறும் தகுதி கூட, சக்ரவர்த்தி சுலிபெலேவுக்கு இல்லை.கலபுரகியில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று, பா.ஜ., - எம்.பி., உமேஷ் ஜாதவ் கூறுகிறார். பா.ஜ., ஆட்சியில் இருந்த போது, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, ஏ.வி.பி.வி., மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி, அப்போதைய உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அப்போது சட்டம் - ஒழுங்கு சீர்குலையவில்லையா?முந்தைய பா.ஜ., ஆட்சியில் ரவுடிகளின் பிறந்தநாள் நிகழ்ச்சியில், போலீசார் கலந்து கொண்டனர். தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்ட மணிகாந்தா ரத்தோட், மரத்தின் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, எனது ஆதரவாளர்கள் தாக்கினர் என்று பொய் கூறினார். அதன்பின்னர் அவரை காணவே இல்லை. கலபுரகியில் நடக்கும் பிரச்னைகளுக்கு, முக்கிய காரணமே எம்.பி., உமேஷ் ஜாதவ் தான்.இவ்வாறு அவர் கூறினார்.