உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய மூத்த டாக்டருக்கு தடை விதிப்பு

ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய மூத்த டாக்டருக்கு தடை விதிப்பு

புதுடில்லி: கர்நாடகாவில் தனியார் மருத்துவக் கல்லுாரிக்கு சாதகமாக அறிக்கை அளிக்க, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மூத்த டாக்டர், தொழில் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கும் வகையில், கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளின் தரம் மற்றும் டாக்டர்களின் செயல்பாடுகளை கண்காணித்து, ஒழுங்குமுறைப்படுத்தும் செயல்பாடுகளை என்.எம்.சி., எனப்படும் தேசிய மருத்துவ கமிஷன் மேற்கொண்டு வருகிறது. தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வரும் இக்கமிஷன் சார்பில் ஆண்டுதோறும் மருத்துவக் கல்லுாரிகளின் தரத்தை ஆய்வு செய்ய மூத்த டாக்டர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்படும்.இதற்கிடையே, கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் சமீபத்தில் என்.எம்.சி., சார்பில் மூத்த டாக்டர்கள் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது. அப்போது, இக்குழுவில் இருந்த மூத்த டாக்டர் ஒருவர் அக்கல்லுாரிக்கு சாதகமாக அறிக்கை அளிக்க 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், லஞ்சம் பெற்றது உறுதியானதையடுத்து, அந்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.இதற்கிடையே, கைதான டாக்டரை கருப்புப்பட்டியலில் வைக்க என்.எம்.சி., உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:இதுபோன்ற ஒழுங்கீன செயல்பாடுகளை, என்.எம்.சி., ஒருபோதும் அனுமதிக்காது. எனவே, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூத்த டாக்டர் மீதான இறுதி விசாரணை முடியும்வரை, அவரது மருத்துவ செயல்பாடுகளை முடக்கும் வகையில், கருப்புப் பட்டியலில் வைக்கப்படுகிறார். இதேபோல், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லுாரியின் நடப்பு கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 07, 2025 06:40

அந்த கல்லூரி பெயரும் , மருத்துவர் பெயரும் வெளியிட என்ன தயக்கம்


Elango S
ஜூலை 07, 2025 12:11

வெளியிடாமல் இருக்க லஞ்சம் கொடுத்து இருப்பார்


Kasimani Baskaran
ஜூலை 07, 2025 03:58

லஞ்சம் கொடுத்தவர்களின் தரவரிசையையும் இரத்து செய்ய வேண்டும். தவறான பரிந்துரை கொடுத்தவருக்கு கருப்புப்பட்டியல் மட்டுமல்ல - வேலையை விட்டே நிரந்தரமாக தூக்கவேண்டும்.


Natarajan Ramanathan
ஜூலை 07, 2025 00:34

இதுபோல மோசடிகள் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியிலும் நடக்கிறதே...