உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலீஜியம் பரிந்துரைக்கு மூத்த நீதிபதி எதிர்ப்பு

கொலீஜியம் பரிந்துரைக்கு மூத்த நீதிபதி எதிர்ப்பு

புதுடில்லி, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் எம்.பஞ்சோலியை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, 'கொலீஜியம்' பரிந்துரை செய்ததற்கு, அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள மூத்த நீதிபதி பி.வி.நாகரத்னா அதிருப்தி தெரிவித்து உள்ளார். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வது, பணியிட மாற்றம் செய்வது போன்ற முடிவுகளை, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு எடுக்கிறது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலிஜீயம் அமைப்பில், மூத்த நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆகியோர் உள்ளனர். இந்த கொலீஜியம் அமைப்பின் கூட்டம், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் சமீபத்தில் நடந்தது. அதில், மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் எம்.பஞ்சோலி ஆகியோரை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்ட அளவான 34 ஆக அதிகரிக்கும். இந்நிலையில், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் எம்.பஞ்சோலியை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்ததற்கு, அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள மூத்த நீதிபதி பி.வி.நாகரத்னா அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி பி.வி.நாகரத்னா எழுதிய கடிதம்: குஜராத் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஏற்கனவே பதவி வகிக்கின்றனர். இந்த சூழலில், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் எம்.பஞ்சோலியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது, பிராந்திய பிரதிநிதித்துவத்தின் சமநிலையை சீர்குலைக்கும். குஜராத்தில் இருந்து பாட்னாவுக்கு நீதிபதி விபுல் எம்.பஞ்சோலி பணியிட மாற்றம் செய்யப்பட்டதும், குறுகிய காலத்திலேயே தற்போது பதவி உயர்வு அளிப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்த நடவடிக்கை தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதோடு, கொலீஜியத்தின் நம்பகத்தன்மை குறித்தும் சந்தேகங்களை எழுப்பக்கூடும். பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை கவனிக்காவிட்டால், நீதி நிர்வாகத்தில் பாதகமான விளைவு ஏற்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Subburamu K
ஆக 27, 2025 12:50

The system of judges appointments must be changed. Collegium system of appointments not good. They suggest only judges close to them in lower courts or in bar councl juniors worked under them or relatives


ஆரூர் ரங்
ஆக 27, 2025 10:44

நேரு, இந்திரா தமக்குத்தாமே பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்வது ஏற்றுக் கொள்ளவே முடியாத அபத்தம். பயங்கரத் தவறு.


Gajageswari
ஆக 27, 2025 09:38

வழக்குகள் 4 மாதம் முடிந்தும் ஒரு முறை கூட பட்டியல் இடபடவில்லை என்பதில் அக்கறை இல்லை. தாமதிக்க பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று அறிந்தவர்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமனம் செய்ய வேண்டும்


ஆரூர் ரங்
ஆக 27, 2025 09:28

தலைமை நீதிபதியின் மருமகனும் நீதிபதி தேர்வுப் பட்டியலில் உள்ளாராம். உறவினர்கள் நண்பர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு எனத் தெரிந்தாலே தாமே தங்களை Recuse விடுவித்துக் கொள்ளும் நீதிபதிகள் உள்ள நாட்டில் இதுவும் நடக்கிறது. பணிமூப்பைப் புறக்கணித்து இளையவர்கள் நியமிக்கப்படுவது முறைகேடுகளுக்கு வழி கொடுக்கும்.


visu
ஆக 27, 2025 08:42

உலகத்திலேயே தங்களை தாங்களே நியமித்து கொள்ளும் ஒரே அமைப்பு கொலீஜியம்தான் எந்த பொறுப்பும் கிடையாது சகல அதிகாரங்களும் உள்ளது உச்ச நீதீமன்றமா இவர்களை கேள்வி கேட்க எதாவது அமைப்பு உள்ளதா


Iniyan
ஆக 27, 2025 04:53

இவர் பணமதிப்பு இழப்பை எதிர்த்த உத்தமி. காங்கிரெஸ் நக்சலைட்கள் ஆதரவாளர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை