சென்னப்பட்டணா தொகுதி பிரசாரத்தில் அனல்!: நிகிலை தோற்கடிக்க சிவகுமார் தீவிரம்: 3 கட்சிகளின் தலைவர்களும் முகாம்
ராம்நகர்: சென்னப்பட்டணா இடைத்தேர்தல் பிரசாரத்தில், அனல் பறக்கிறது. தேசிய ஜனநாய கூட்டணி வேட்பாளர் நிகில் குமாரசாமியை தோற்கடிக்க வேண்டும் என, துணை முதல்வர் சிவகுமார் தீவிரமாக செயல்படுகிறார். மூன்று கட்சிகளின் முக்கிய தலைவர்களும் தொகுதியில் முகாமிட்டுள்ளனர். குமாரசாமி எம்.பி.,யாகி, லோக்சபாவுக்கு சென்றதால், அவர் எம்.எல்.ஏ.,வாக இருந்த ராம்நகரின், சென்னப்பட்டணா தொகுதி காலியானது. இத்தொகுதி உட்பட மூன்று தொகுதிகளுக்கு நவம்பர் 13ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் கூட்டணி சார்பில் களமிறங்க, யோகேஸ்வர் ஆர்வம் காட்டினார். சீட் பெற அதிகபட்சம் முயற்சித்தார். சீட் கிடைப்பது சந்தேகம் என்பது தெரிந்ததால், பா.ஜ.,வுக்கு முழுக்கு போட்டு காங்கிரசுக்கு தாவினார்.சென்னப்பட்டணா தொகுதியில், காங்., வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்த தொகுதி, தன் கட்சியின் கையை விட்டு சென்று விடக்கூடாது என்பதில், மத்திய அமைச்சர் குமாரசாமி உறுதியாக இருக்கிறார். இதே காரணத்தால், யோகேஸ்வரின் வேண்டுகோளை ஏற்கவில்லை. தன் மகன் நிகிலை களமிறக்கியுள்ளார்.ஏற்கனவே இரண்டு முறை தேர்தலில் தோற்றவர் நிகில். இம்முறையும் தோற்றால், மகனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்ற பீதியால் இவரை களமிறக்க, குமாரசாமி தயங்கினார். ஆனால் தேசிய தலைவர் தேவகவுடா, 'நிகில் தோற்றாலும் பரவாயில்லை. அவருக்கே சீட் தாருங்கள்' என, ஆலோசனை கூறினார். இதன்படியே அவர் வேட்பாளரானார்.அவருக்கு பக்கபலமாக பா.ஜ., தலைவர்கள் நின்றுள்ளனர். மாநில தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் அசோக் உட்பட பலர் சென்னப்பட்டணாவில் முகாமிட்டு, குமாரசாமியுடன் இணைந்து பிரசாரம் செய்கின்றனர். மற்றொரு பக்கம் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர்கள், கட்சி வேட்பாளர் யோகேஸ்வருக்காக பிரசாரம் செய்கின்றனர். லோக்சபா தேர்தலில் தோற்ற தன் தம்பி சுரேஷை, சென்னப்பட்டணாவில் களமிறக்கி, வெற்றி பெற வைக்க சிவகுமார் திட்டமிட்டார். ஆனால், இது தேவகவுடா குடும்பத்தினருக்கு, அதிக செல்வாக்குள்ள தொகுதியாகும். இங்கு சுரேஷ் தோற்றால், சிவகுமாரின் இமேஜ் பாதிக்கும். எனவே, சுயேச்சையாக போட்டியிட விரும்பிய யோகேஸ்வரின் மனதை கரைத்து, காங்கிரசுக்கு அழைத்து வந்து வேட்பாளராக்கினர். அவரை வெற்றி பெற வைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இரண்டு பிரபலமான ஒக்கலிகர் தலைவர்கள் போட்டியிடுவதால், தொகுதியில் பிரசாரம் அனல் பறக்கிறது.யோகேஸ்வர், நிகில் என, இருவருக்குமே வெற்றிக்கனி எளிதில் கிடைக்காது. அதிகம் போராட வேண்டும். சென்னப்பட்டணா, சிவகுமாரின் கனகபுரா தொகுதிக்கு அருகில் உள்ளது. இதுவரை சென்னப்பட்டணா தொகுதியில் அக்கறை காட்டாத சிவகுமார், லோக்சபா தேர்தல் முடிவு வெளியான கையோடு, தொகுதியில் அடியெடுத்து வைத்தார். பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தார்.சண்டூர், ஷிகாவியை விட, சென்னப்பட்டணா தொகுதிக்கு காங்கிரஸ் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. அதிகமான பிரசாரம் செய்கின்றனர். காங்., ஆளுங்கட்சியாகவும் உள்ளதால், நிகிலுக்கு வெற்றி சவாலாக இருக்கும்.இதற்கு முன் ம.ஜ.த., தனித்திருந்தது. இப்போது பா.ஜ.,வின் பக்கபலம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில், குமாரசாமி இடம் பெற்றுள்ளார். 2023 சட்டசபை தேர்தலின் போது, குமாரசாமி 48.83 சதவீதம் ஓட்டுகள், பா.ஜ.,வின் யோகேஸ்வர் 40.7 சதவீதம் ஓட்டுகளை பெற்றிருந்தனர். வெறும் 7.77 சதவீதம் ஓட்டுகள் பெற்று, காங்கிரஸ் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் தான், ஒரு வாரத்துக்கு முன் காங்கிரசில் இணைந்த யோகேஸ்வருக்கு சீட் அளிக்கப்பட்டது. இது கட்சியில் அதிருப்திக்கு காரணமாகியுள்ளது. தலைவர்கள் பலரும் முணுமுணுக்கின்றனர். எனவே இவர் வெற்றி பெறுவது, அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.இதை உணர்ந்தே, மூன்று கட்சிகளின் தலைவர்களும், சென்னப்பட்டணாவில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது நிகில், யோகேஸ்வர் இடையிலான போட்டி என்பதை விட, குமாரசாமி மற்றும் சிவகுமார் இடையிலான போட்டி என்பதே பொருத்தமாக இருக்கும். ....பாக்ஸ்....மத்திய அமைச்சர் குமாரசாமி, தன் மனைவி, மருமகள், பேரனுடன் நேற்று ஹாசனுக்கு வருகை தந்து, ஹாசனாம்பாவை தரிசனம் செய்தார். ஹாசனாம்பாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பின் சித்தேஸ்வரரை தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சுவாமி விக்ரகத்தில் இருந்து வலது புறமாக பூ கீழே விழுந்தது. இது சுப சகுனத்தின் அடையாளம் என, கருதப்படுகிறது. சித்தேஸ்வரரின் ஆசி கிடைத்ததாக, குமாரசாமி மகிழ்ச்சி அடைந்துள்ளார். .....புல் அவுட்....சென்னப்பட்டணாவில் இருந்தே, காங்கிரசின் அழிவு ஆரம்பமாகும். ஹாசனாம்பாவை தரிசித்த பின், நான் இந்த வார்த்தையை கூறுகிறேன். என் மகனை அரசியல் ரீதியாக ஒழிக்க, காங்கிரஸ் முயற்சிக்கிறது. இக்கட்சியினர் என்ன சதி செய்தாலும், என் மகன் வெற்றி பெறுவார். - ஹெச்.டி.குமாரசாமி, மத்திய அமைச்சர்***