இட்லிக்காக வரிந்துகட்டிய சசி தரூர்: சமூக வலைதளத்தில் ஆவி பறந்த விவாதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ''இட்லி ஒரு உன்னதமான படைப்பு. பீத்தோவனின் சிம்பொனி, தாகூரின் கவிதை, ஹூசைனின் ஓவியம், டெண்டுல்கரின் செஞ்சுரிக்கு இணையானது. அதை வெறுப்பவர்களை நினைத்து வருந்துகிறேன்,'' என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய உணவான இட்லி - தோசை, இவற்றில் எது சிறந்தது என்ற விவாதம் சமூக வலைதளத்தில் சூடு பறக்க நடந்தது. அதில், ஒருவர் 'தோசை பற்றி கூற வார்த்தைகளே இல்லை; மதிக்கிறேன். ஆனால், நன்கு வேகவைக்கப்பட்ட இட்லியை கண்டு வருந்துகிறேன்' என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் வெளியிட்ட பதிவு: குறை காண்பவர்களால் நிச்சயம் நல்லதை அனுபவிக்கவே முடியாது. உண்மையிலேயே இட்லி ஒரு சிறந்த உணவு. வெண் மேகம் போன்றது. மனித நாகரிகத்தின் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான கனவு. அது ஒரு உன்னதமான படைப்பு. அரிசியும் உளுந்தும் கலந்த லேசான உணவு. நாவில் பட்டதும் உருகிவிடும் அளவுக்கு பஞ்சு போல மென்மையாக ஆவியில் வேக வைக்கப்பட்டது. பீத்தோவனின் சிம்பொனி, தாகூரின் கவிதை, ஹூசைனின் ஓவியம், டெண்டுல்கரின் செஞ்சுரிக்கு இணையானது. இப்படிப்பட்ட உணவைக் குறை கூறுவோர் ஆன்மா இல்லாதவர்கள். தென்னிந்திய கலாசாரத்தின் மிக அற்புதமான சாதனைக்கு ஒரு பாராட்டு கூட தெரிவிக்க முடியாதவர்களை நினைத்து பரிதாபப்படுகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டார். இந்த பதிவுடன் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஆவி பறக்கும் இட்லியை சமையல் அறையில் இருந்தபடி சமைப்பது போன்ற படத்தையும் அவர் வெளியிட்டார்.