அரசியலை விட்டு விலக தயார்; டிகே சிவகுமார் சவால்
பெங்களூரு: தன் மீது சுமத்திய குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் குமாரசாமி நிருபித்தால், தான் அரசியலை விட்டு விலக தயாராக இருப்பதாக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.கர்நாடகா முதல்வர் பதவிக்காக சித்தராமையாவிடம் துணை முதல்வர் டிகே சிவகுமார் மல்லுக்கட்டி கொண்டிருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள், காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, டிகே சிவகுமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், கர்நாடகா அரசு எந்த நேரமும் கவிழும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியது மேலும் பரபரப்பை உண்டாக்கியது.இந்த நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், குமாரசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.அவர் கூறியதாவது; குமாரசாமி ஒரு துரோகி. நான் அமித் ஷாவுடன் தொடர்பில் இருக்கிறேன் என்பதை அவர் நிருபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார். அவர் என்னுடைய சவாலை ஏற்க தயாரா? குமாரசாமி முதல்வராக இருந்த போது, என் மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு போட்டார். நான் அந்த வலியில் இருந்தே இன்னும் மீளவில்லை. ஒருமுறை அவர் நான் என்னுடைய பெற்றோருக்கு பிறக்கவில்லை என்று கூறினார். அதன்பிறகு என்னுடைய தாயாரிடம் மன்னிப்பு கேட்டார். சாத்தனூரில் என்னை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்பவும் என்னுடைய கட்சி என் மீது அன்பும், மரியாதையும் கொண்டுள்ளது. நான் நேருக்கு நேர் மோதுபவன். குமாரசாமி முதுகில் குத்துபவர். உங்களுக் தைரியம் இருந்தால், ஊடகங்கள் முன்பு நிருபியுங்கள். எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். குமாரசாமி மீது அவமதிப்பு வழக்குப்பதிவு செய்ய உள்ளேன், இவ்வாறு அவர் கூறினார்.