உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகார பகிர்வு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகுமார்

அதிகார பகிர்வு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகுமார்

பெங்களூரு: அதிகாரம் பகிர்வு குறித்து, அவ்வப்போது எழும் சர்ச்சைகளுக்கு, துணை முதல்வர் சிவகுமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஐந்தாண்டு முதல்வர் பதவியில் நீடிக்க, சித்தராமையாவுக்கு இருந்த தடை நீங்கியது. அவரது ஆதரவாளர்கள் உள்ளுக்குள் கொண்டாடுகின்றனர்.கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. இது, கட்சி மேலிடத்துக்கு மகிழ்ச்சி அளித்தாலும், முதல்வரை தேர்வு செய்வது பெரும் தலைவலியாக இருந்தது. ஏன் என்றால் முதல்வர் பதவிக்கு, சிவகுமார், சித்தராமையா, எம்.பி.பாட்டீல், பரமேஸ்வர் உட்பட பலர் நான் நீ என, முட்டி மோதினர்.

சமாதான பேச்சு

போட்டி வலுத்ததால், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அமைச்சர் பதவி கிடைத்தால் போதும் என, நினைத்து சிலர் ஒதுங்கி கொண்டனர். கடைசியாக சித்தராமையா, சிவகுமார் போட்டியில் இருந்தனர். கட்சி மேலிடம் ஒருவாரம் டில்லியில் இருவருடனும், சமாதான பேச்சு நடத்தியது. இறுதியில் சோனியா தலையிட்டு இரண்டு தலைவர்களையும் சமாதானம் செய்தார். சித்தராமையா முதல்வரானார்; சிவகுமார் துணை முதல்வரானார், மாநில தலைவராகவும் நீடித்தார்.அப்போது இருவரும், இரண்டரை ஆண்டுகள் வீதம், முதல்வர் பதவியில் இருக்க, மேலிடம் அளவில் ஒப்பந்தம் நடந்ததாக தகவல் வெளியானது. இது பற்றி துணை முதல்வர் சிவகுமார் சமீபத்தில் ஒப்பு கொண்டார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

கனகபுரா பாறை

இதையே முன் வைத்து, தலைவர்கள், அமைச்சர்கள் கருத்து தெரிவிக்க துவங்கினர். இதனால் அரசு மற்றும் கட்சியில் குழப்பம் ஏற்பட்டது. இது எதிர்க்கட்சிகளுக்கு அஸ்திரமாக அமைந்தது. முதல்வர் பதவிக்காக காங்கிரசில் தலைவர்கள் முட்டி மோதுகின்றனர் என, விமர்சித்தனர்.தர்ம சங்கடத்துக்கு ஆளான சிவகுமார், ஊடகத்தினர் சந்திப்பு நடத்தி, 'எங்களுக்கு இடையே எந்த ஒப்பந்தமும் நடக்கவில்லை. முதல்வருக்கு பக்கபலமாக, இந்த கனகபுரா பாறை உள்ளது. இந்த பாறை சாகும் வரை சித்தராமையாவுக்கு ஆதரவாக நிற்கும். பதவி பகிர்வு குறித்து இனி யாரும் பேசக்கூடாது' என அமைச்சர்கள், தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.அதிகாரம் பகிர்வு சர்ச்சைக்கு, சிவகுமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எனவே சித்தராமையா ஐந்தாண்டு பதவியில் நீடிப்பதில், எந்த இடையூறும் இருக்க வாய்ப்பில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் குஷியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
டிச 09, 2024 14:12

கடைசி வரை துணை தான் , தமிழக கார்பொரேட் குடும்பம் போல இவனது குடும்பமும் பெரிய கார்பொரேட் குடும்பமாக வளர்ந்து நிற்கிறது கருநாடகத்தில்


வைகுணசேகரன்
டிச 09, 2024 12:53

அய்யோ பாவம். கான்க்ராஸ்ன் சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றின் பலிகாடா சிவகுமார்...முதல்வர் பதவி வெறும் கனவு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை