உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குளறுபடிகளுக்கு இடம் தராமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்

குளறுபடிகளுக்கு இடம் தராமல் ஜாதிவாரி கணக்கெடுப்பு: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ''குளறுபடிகளுக்கு இடம் தராமல் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; ஓபிசி மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டசபையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை: குளறுபடிகளுக்கு இடம் தராமல் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; ஓபிசி மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டசபையில் தீர்மானம் இயற்ற வேண்டும். தற்போது எடுக்கப்பட்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தோரைக் கணக்கிட தனிப்பட்ட பட்டியலை பயன்படுத்தாமல், Open-column method முறையை மத்திய அரசு பயன்படுத்தும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ளவை வகுப்புகள்தானே தவிர, அவை ஜாதிகள் அல்ல என்று மத்திய அரசு தரப்பில் தரப்பட்டுள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல. மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள ஜாதிகளின் பட்டியலைப் பெற்று, தொகுத்து, பதிவேற்றி, அதில் இடம்பெற்றுள்ள ஜாதிகளில் ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் வழிமுறையே குழப்பங்களுக்கு இடம் தராது. மாறாக, பொதுமக்கள் கூறும் சாதியின் பெயரைப் பதிவேற்றுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கும். இதனால் இந்தியாவில் 46 லட்சம் ஜாதிகள் இருப்பதாகக் குளறுபடியான கணக்கு வரும் என்ற ஆபத்தைச் சமூகநீதியில் அக்கறை கொண்ட பலரும் சுட்டிக்காட்டுவதை அரசு புறந்தள்ளிவிடக் கூடாது.ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் நோக்கமே பட்டியலினச் சமூக மக்களின் எண்ணிக்கையைப் போல, ஓபிசி மக்களின் உண்மையான எண்ணிக்கையையும் அவர்களது கல்வி, சமுதாய, பொருளாதார நிலைமையையும் அறிந்துகொள்வதுதான். அப்போதுதான் அவர்கள் அதிகாரம் பெறுவதற்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை வகுக்கவும், அவர்தம் முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டவும் அரசுகளால் இயலும். அப்படி இருக்கையில், மத்திய, மாநில அரசுகளின் ஓபிசி ஜாதிகளின் பட்டியலை வைத்து, அதிலிருந்து மக்கள் ஜாதிப்பெயரைத் தேர்வு செய்யும் முறையைப் பின்பற்றினால்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும்.தற்போதைய முறையைத் தொடர்ந்தால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் 12 ஆயிரம் கோடி ரூபாயும், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணடிக்கப்படும். இதனால் எந்தப் பயனும் இல்லை. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக அமைந்துவிடும் ஆபத்தைப் புறந்தள்ளக் கூடாது. பொருத்தமற்ற விளக்கங்களைக் கூறி, ஒரு தவறை நியாயப்படுத்தாமல், குளறுபடிகளுக்கு இடம் தராமல், ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறுவதற்கான திருத்த நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்து, நீதி வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்துகிறேன். தமிழக அரசும், தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், நடப்பு சட்டசபை கூட்டத் தொடரிலேயே இதற்கான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி, உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

சிறப்பு வீடியோ!

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை; அப்படி சொல்லி இருப்பது என்ன என்பது குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்புவீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
செப் 07, 2026 04:58

துக்ளக்கார் தானும் செய்யமாட்டார் ...... மற்றவர்களையும் செய்ய விடமாட்டார் ......


kjpkh
செப் 06, 2026 18:45

தானும் செய்வது கிடையாது. செய்பவர்களையும் செய்ய விடாமல் குழப்புவது. தன் இருப்பைக் காட்டிக்கொள்ள என்னத்தையாவது எழுதிக் கொடுத்ததை சொல்லி உளறுவது..எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களை ஒதுக்கி வைக்கும் பட்டியலில் இவரையும் சேர்த்தால் திமுகவுக்கு நல்லது


GMM
செப் 06, 2026 17:16

ஓபிசி பட்டியலில் இடம் பெற்றுள்ளவை வகுப்புகள் தானே தவிர, அவை ஜாதிகள் அல்ல என்ற மத்திய அரசு சார்பில் தரப்பட்டுள்ள விளக்கம் 100 சதவீதம் சரியானது. பொதுமக்கள் கூறும் சாதியின் பெயர் தான் உண்மையானது. உண்மையை கூறினால் குழப்பம் வருமாம். திமுக வழங்கிய போலி சாதி சான்றும் வெளிவரும். சமூக நீதிக்கு 46 லட்சம் ஜாதிகள் இருந்தாலும் எதுவும் பாதிக்காது. சாதி சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அமுலில் இல்லை.


மேலும் செய்திகள்