UPDATED : ஏப் 30, 2024 11:47 AM | ADDED : ஏப் 30, 2024 11:03 AM
கவுகாத்தி: பாலியல் புகாரில் சிக்கிய ம.ஜ.த வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பா.ஜ., மகளிருக்கு ஆதரவாக நிற்கும் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.கர்நாடகாவில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் ஹசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டார். கடந்த ஏப்.,26ல் அத்தொகுதியில் ஓட்டுப்பதிவு நடந்துமுடிந்தது. இந்த நிலையில், அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிரஜ்வலுக்கு எதிராக பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தன; மகளிர் அமைப்புகளும் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தின. இது தொடர்பாக அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பதில்: பா.ஜ., மகளிருக்கு ஆதரவாக நிற்கும். பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் விவகாரத்தில் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிருக்கு எதிரான குற்றங்களை பா.ஜ., கடுமையாக எதிர்க்கிறது. இதுபோன்ற வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; விசாரணையும் நடத்த வேண்டும். விசாரணைக்கு நாங்களும் (பா.ஜ.,) ம.ஜ.த.,வும் ஆதரவளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தன்னம்பிக்கை இல்லை
உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்., எம்.பி., ராகுல் மற்றும் ரேபரேலி தொகுதியில் காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக அமித்ஷாவிடம் எழுப்பிய கேள்விக்கு, ''அவர்கள் தேர்தலில் போட்டியிடுவார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் குழப்பமாக இருப்பது, அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. உத்தரபிரதேசத்தில் அவர்கள் பாரம்பரிய இடங்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்'' என அமித்ஷா பதிலளித்தார்.