டில்லியில், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்ப விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட, அங்குள்ள மக்கள் முடிவு செய்துள்ளனர். தலைநகர் டில்லியில் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில், காற்றின் தரக் குறியீடு, 1,000த்தை கடந்துள்ளது. இது மிகவும் மோசமான நிலை என மாசு கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது. பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாபில் எரிக்கப்படும் விவசாய கழிவுகள், டில்லியில் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. அதிகரித்து வரும் காற்று மாசால் அங்குள்ள குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மூச்சுவிடக் கூட முடியாமல் சிரமப்படும் சூழல் உருவாகிறது. ஆகையால், சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்த, டில்லி அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. உத்தரவு
அந்த வகையில், டில்லியில் இயங்கும், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க பெட்ரோல் பங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று தர மேலாண்மை கமிஷனின் இந்த உத்தரவு, நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவால், டில்லியில் உள்ள 62 லட்சம் வாகனங்களின் பயன்பாடு முடிவுக்கு வந்துள்ளது. பழைய வாகனங்களை கண்டறிந்து கைப்பற்ற டில்லி போலீஸ், போக்குவரத்து போலீஸ், டில்லி மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய பிரத்யேக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. டில்லி நகரில் உள்ள, 400க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் குவிந்துள்ள இந்த குழு, அங்கு எரிபொருள் நிரப்ப வரும் பழைய வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறது. இதற்காக, வாகனங்களின் நம்பர் பிளேட்டை வைத்து, அது எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதை கண்டறியும் கருவியும் அங்கு பொருத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்துக்கான ஆர்.சி., எனப்படும் பதிவு சான்றிதழை காண்பித்த பிறகே, எரிபொருள் நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நோட்டீஸ்
இது மட்டுமின்றி, ஆர்.டி.ஓ., அலுவலக உதவியுடன், 15 ஆண்டுகள் பழமையான வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவு அமலுக்கு வந்த நேற்று முன்தினம் மட்டும் 80 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டாவது நாளான நேற்று, 165 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு, 10,000 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டன. அதிகாரிகளின் கெடுபிடியால், ஹரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப் போன்ற பகுதிகளில் இருந்து வரும் காய்கறி வாகனங்கள், டில்லிக்கு வராமல் எல்லையிலேயே அவற்றை இறக்கிவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வரும் காலங்களில் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், பழைய வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என டில்லி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசியல் மற்றும் சமூக அமைப்புகளும் இதே கருத்தை தெரிவித்து வருகின்றன. டில்லியைச் சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், 'பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனாவில் கூட இதுபோன்ற விதிகள் இல்லை. இங்கு மட்டும் ஏன் இந்த உத்தரவு? நான் கார் வாங்கி 10 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு லட்சம் கி.மீ., கூட ஓடவில்லை. நல்ல நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாமல் உள்ள காரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது மிகவும் கவலையளிக்கிறது' என்றார். டில்லியில் உள்ள நடுத்தர குடும்பத்தினர் பலர், கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். அன்றாட பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து போராடவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஏன் இந்த அவசரம்?
டில்லியில் உள்ள பெரும்பாலான மக்கள் அலுவலகங்களுக்கு செல்ல தங்கள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த உத்தரவால், அவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? பல மூத்த குடிமக்கள் உள்ளூர் பயன்பாட்டிற்காக, பழைய வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் கடைகளுக்கு இனி நடந்து செல்வார்களா? எந்தவொரு வாகனத்தின் வயதுக்கும், அதனால் ஏற்படும் மாசுபாட்டிற்கும் சம்பந்தம் இல்லை. பிறகு ஏன், இந்த அவசர உத்தரவு? -ஆதிஷி, டில்லி முன்னாள் முதல்வர், ஆம் ஆத்மி-நமது சிறப்பு நிருபர்-