எஸ்.சி., பிரிவுக்கு உள் இடஒதுக்கீடு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு
பெங்களூரு: எஸ்.சி., பிரிவில் உள்ள துணை பிரிவுகளுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஓய்வு பெற்ற நீதிபதி நாக்மோகன் தாஸ் தலைமையிலான கமிஷனை, மாநில அரசு அமைத்தது.கடந்த சில நாட்களுக்கு முன், இது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவும், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 'ஒரு வாரத்திற்குள் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும்' என்று அமைச்சர்கள் பரமேஸ்வர், மஹாதேவப்பா ஆகியோர் கூறியிருந்தனர்.இந்நிலையில், நேற்று பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையாவிடம், 104 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை, ஓய்வு பெற்ற நீதிபதி நாக்மோகன் தாஸ் வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி:உள் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, தீர ஆராய்ந்து ஆய்வு செய்த பின் 104 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. விரைந்து அறிக்கை வழங்கும்படி அரசு கேட்கவில்லை. நாங்களாகவே அரசிடம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்து உள்ளோம். இதன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.இடஒதுக்கீட்டில், நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். அதற்காக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் என்ன உள்ளது என்பதை நான் கூற முடியாது. அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.