உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., முன்னாள் அமைச்சர் தேவகவுடாவுடன் திடீர் சந்திப்பு

பா.ஜ., முன்னாள் அமைச்சர் தேவகவுடாவுடன் திடீர் சந்திப்பு

பெங்களூரு : முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, பா.ஜ., முன்னாள் அமைச்சர் சோமண்ணா, திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். லோக்சபா தேர்தலில் துமகூரு தொகுதி, 'சீட்' கிடைக்க உதவும்படி கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலிடம் மீது அதிருப்தி

பா.ஜ., முன்னாள் அமைச்சர் சோமண்ணா. கடந்த மே நடந்த சட்டசபை தேர்தலில், கட்சி மேலிடம் கூறியதால், தொகுதி மாறிப் போட்டியிட்டார். போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். இதனால் மேலிடம் மீது அதிருப்தியில் உள்ளார்.அவ்வப்போது சொந்த கட்சித் தலைவர்களை, விமர்சித்து வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் துமகூரு தொகுதியில் இருந்து, பா.ஜ., சார்பில் போட்டியிட அவர் விரும்புகிறார். ஆனால் அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு பத்மநாபநகர் வீட்டில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, சோமண்ணா திடீரென சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தேவகவுடாவின் மகன்கள் ரேவண்ணா, குமாரசாமியும் உடன் இருந்தனர்.இந்த சந்திப்பு அரைமணி நேரம் நீடித்தது. லோக்சபா தேர்தலில் துமகூரு தொகுதி, 'சீட்' கிடைக்க உதவும்படி, தேவகவுடாவிடம், சோமண்ணா கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளியிடுவேன்

இந்த சந்திப்பு குறித்து நேற்று சோமண்ணா அளித்த பேட்டி:சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளிலும், நான் தோற்பதற்கு யார் காரணம் என்று, பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு நன்கு தெரியும். எனது தோல்விக்கு காரணமானவர்கள் மீது, கட்சி ஒழுங்கு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் என் தோல்விக்கு காரணமானவர்கள், பெயரை வெளியிடுவேன்.பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு எனது வாழ்த்துக்கள். அவரது பணி சிறப்பாக இருக்கட்டும். பா.ஜ.,வில் உள்ளவர்கள் மற்ற கட்சிகளுடன், ஒப்பந்த அரசியல் செய்வது பற்றி, விஜயேந்திராவுக்கு தெரியும். இத்தகையவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்.கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்பட கூடாது என்பதற்காக, சில கசப்பான உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. எவ்வளவு காலம் நான் பொறுமையாக இருப்பது? என்னை நம்பியவர்களை ஒருபோதும் ஏமாற்றியது இல்லை. 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். தவிர்க்க முடியாத காரணங்களால் கட்சி மாறி உள்ளேன்.

அசோக் எனது நண்பர்

மாநில அரசின் தவறான நடவடிக்கைகளால், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. கட்சி என்னை எப்படி பயன்படுத்த போகிறது என்று தெரியவில்லை. இதுவரை எனக்கு கொடுத்த பொறுப்பை, திறம்பட செய்து உள்ளேன். லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுவதா, வேண்டாமா என்று, கட்சியே முடிவு செய்யும்.8ம் தேதி டில்லி சென்று, மேலிட தலைவர்களை சந்தித்து பேசுகிறேன். யாரால் எனக்கு அநீதி நடந்தது என்று சொல்வேன். நான் முன்பு ம.ஜ.த.,வில் இருந்தவன். இதனால் மரியாதை நிமித்தமாக, தேவகவுடாவை சந்தித்தேன். அவரது ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு.எனக்கும், எதிர்க்கட்சித் தலைவர் அசோக்கிற்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நானும், அவரும் நண்பர்கள். அவர் முதல்முறை எம்.எல்.ஏ., ஆன போது, நான் அமைச்சராக இருந்தேன். எனது வலியை அவரிடம் கூறினேன். சங்கராந்திக்கு பிறகு, எல்லாம் சரியாகும் என்று நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை