உள்ளாட்சிகளில் பணி நியமனம் தடை நீக்கியது சுப்ரீம் கோர்ட்
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.தமிழகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில், 2,569 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழக அரசு நடத்திய தேர்வை 2 லட்சம் பேர் எழுதினர்.முடிவுகள் வெளியிடப்பட்டு நேர்காணலும் முடிந்த நிலையில், நியமனத்துக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், காலிப் பணியிடங்களை நிரப்ப ஏப்ரல் மாதம் தடை விதித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வில் நேற்று நடந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ''தமிழ்வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இடஒதுக்கீடு அளித்ததைத் தான் மனுதாரர் பிரச்னையாக எழுப்பி உள்ளார்.''அதற்காக ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது தவறானது,'' என வாதிட்டார்.இதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், எதிர் மனுதாரர் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -