கோவிலா, மசூதியா என்ற சர்ச்சை வழக்குகளை... மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு விசாரிக்க தடை
புதுடில்லி கோவிலா, மசூதியா என்ற சர்ச்சைகளை தடுக்கும் வகையில், 1991ல் கொண்டு வரப்பட்ட வழிபாட்டு தலங்கள் சிறப்பு பிரிவுகள் சட்டம் செல்லுமா என்பது குறித்த வழக்கில், மத்திய அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை, நிலுவையில் உள்ள வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரிக்கவோ, இடைக்கால அல்லது இறுதி உத்தரவு பிறப்பிக்கவோ கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி வளாகம், மதுரா கிருஷ்ணர் கோவில் - ஷாஹி இக்தா மசூதி விவகாரம், சம்பலில் ஷாஹி ஜமா மசூதி ஆகியவை தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. முகலாயர்கள் ஆட்சி மற்றும் படையெடுப்பின்போது அங்கிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு, இந்த மசூதிகள் கட்டப்பட்டதாக இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மொத்தம் 18 வழக்குகள் நாடு முழுதும் தொடரப்பட்டுள்ளன. இவை குறித்து விசாரிக்க நீதிமன்றங்களும் உத்தரவிட்டுள்ளன. ஆறு வழக்குகள்
கடந்த 1991ல் கொண்டு வரப்பட்ட வழிபாட்டு தலங்கள் சிறப்பு பிரிவுகள் சட்டத்தின்படி, இந்த வழக்குகள் செல்லாது என முஸ்லிம்கள் தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது.மேலும், ராமர் கோவில் வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வும், 1991 சட்டத்தை மேற்கோள் காட்டியுள்ளது. அதனால், 1991 சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்பதும் முஸ்லிம்கள் தரப்பு வாதமாக உள்ளது.இதற்கிடையே, 1991ல் அறிமுகம் செய்யப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மனுக்களில் கூறப்பட்டு உள்ளதாவது:நீதி பெறுவது என்பது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை. அந்த உரிமையை வழிபாட்டு தலங்கள் சட்டம் பறிப்பதால், இச்சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.அடிப்படைவாதிகள், படையெடுப்பாளர்கள், சட்டத்தை மதிக்காதவர்களால் முன்பு இருந்த வழிபாட்டு தலத்தின் கட்டமைப்பு மாற்றப்பட்டு உள்ளது. அதனால், 1947 ஆக., 15 என்று தேதி நிர்ணயித்து, 1991ல் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளன. விசாரணை
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் தனி அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம். மறு உத்தரவு வரும் வரை, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை பதிவு செய்யவோ, விசாரிக்கவோ கூடாது. நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளிலும், ஆய்வு மேற்கொள்வது உட்பட இடைக்கால மற்றும் இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சட்டம் என்ன சொல்கிறது?
கடந்த 1990களின் துவக்கத்தில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்னை தீவிரமாக இருந்தது. ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது பாபர் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன.ராமர் கோவில் கட்டக் கோரி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி நாடு முழுதும் ரத யாத்திரை மேற்கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது, பிரதமராக இருந்த காங்கிரசின் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு, வழிபாட்டு தலங்கள் சிறப்பு பிரிவுகள் சட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி, 1947, ஆக., 15ல் நாடு சுதந்திரம் பெற்றபோது இருந்த எந்த ஒரு வழிபாட்டு தலத்திலும் மாற்றங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும், அதன் மீது மற்றொரு சமூகத்தினர் உரிமை கோரவும் தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் பாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.