| ADDED : டிச 08, 2025 06:38 PM
புதுடில்லி : பாலியல் வழக்குகளில் விசாரணையின் போது, நீதிமன்றங்கள் சர்ச்சைக்குரிய வகைகளிலும், பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், அதனை நிறுத்துவதற்கு விதிமுறைகளை வகுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, '' பெண்களின் மார்பகங்களை பிடிப்பது , ஆடையை இழுப்பது பாலியல் வன்கொடுமை ஆகாது,'' என அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த உத்தரவு குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், அதற்கு தடை விதித்து இருந்தது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சோபா குப்தா என்ற மூத்த வழக்கறிஞர், ' அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், கோல்கட்டா மற்றும் ராஜஸ்தான் ஐகோர்ட்களும் இதேபோன்ற கருத்துகளை தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.மற்றொரு வழக்கறிஞர், விசாரணை நீதிமன்றத்தில் ஆன்லைன் முறையிலான விசாரணையின் போது பெண் ஒருவர் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்து இருந்தார்.இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியதாவது: இதுபோன்ற உத்தரவுகள் மற்றும் கருத்துக்கள், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தினால், தங்களது கருத்தை வெளிப்படுத்துவதை தடுக்கிறது. வழக்கை திரும்பப் பெறுவதற்கான அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். துபோன்ற தகவல்கள் சேர்த்த பிறகு, ஐகோர்ட்களுக்கு என விதிமுறைகள் வகுக்கப்படும். பாலியல் வழக்குகளை விசாரிக்கும் ஐகோர்ட்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு இந்த விதிமுறைகள் பேருதவியாக இருக்கும். இவ்வாறு அந்த அமர்வு தெரிவித்துள்ளது.