உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ஆரவல்லி மலைத்தொடருக்கான வரையறை; உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

 ஆரவல்லி மலைத்தொடருக்கான வரையறை; உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

ஆரவல்லி மலை குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி என நான்கு மாநிலங்கள் முழுதும் நீண்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சம் இந்த மலைத்தொடரில் நான்கு புலிகள் காப்பகங்கள் மற்றும் 22 வனவிலங்கு சரணாலயங்கள் உட்பட பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் அமைந்துள்ளன. சம்பல், சபர்மதி, லுானி நதிகளின் பிறப்பிடமாக இந்த மலைத்தொடர் விளங்குகிறது.

போராட்டம்

மிகப் பழமையான ஆரவல்லி மலைத்தொடரின் பாதுகாக்கப்பட்ட பகுதியை வரையறுப்பதில், ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசம் இருந்தது. இதையடுத்து 'தரைமட்டத்தில் இருந்து 100 மீட்டர் அதாவது, 328 அடி உயரம் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே ஆரவல்லி மலைத்தொடராக கருதப்படும்' என, மத்திய அரசு அமைத்த குழு புதிதாக வரையறுத்தது. 'இரு குன்றுகளுக்கு இடையே குறைந்தது, 1,640 அடி இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அது மலைத்தொடராக கருத முடியாது' எனவும் வரையறுத்து, அக்குழு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்ட நிலையில், இந்த புதிய வரையறை, சுரங்கத் தொழில் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும், சட்டவிரோத சுரங்கப் பணிகளுக்கு வித்திடும் என்றும் சுற்றுச்சூழ ல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆரவல்லி மலைத்தொடரை வெறும் உயரத்தை மட்டும் வைத்து வரையறுக்கக் கூடாது. அதன் நிலவியல், காலநிலை ரீதியான பங்களிப்பைக் கொண்டே வரையறுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து ஆரவல்லி மலைத்தொடரை காப்பாற்றக் கோரி போராட்டங்களும் நடந்தன. இதனால், கடந்த வாரம் இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான விடுமுறை கால அமர்வு முன் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஆரவல்லி மலைத்தொடர் குறித்த குழுவின் பரிந்துரைகளையும், இந்த நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக நிறுத்தி வைக்கிறோம். மறு ஆய்வு மலைத்தொடர் என்பதற்கான சரியான வரையறை வழங்க, புதிய குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். அக்குழு மறு ஆய்வு நடத்தி விரிவான விளக்கம் தர வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் நான்கு மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜன., 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ஆரவல்லிக்கு வயசு 200 கோடி ஆண்டுகள்

ஆரவல்லி மலைத்தொடர் உலகிலேயே பழமையானது. 200 கோடி ஆண்டுகள் வரை பழமையானது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பளிங்கு கல், கிரானைட், துத்தநாகம், தங்கம் ஆகியவை இம்மலையில் கொட்டி கிடப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஆரவல்லி மலைத்தொடரில் சட்டத்திற்கு புறம்பான சுரங்க வேலைகள் நடக்கின்றன. அதை தடுத்த நிறுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தான், ஆரவல்லி மலைத்தொடரை வரையறுத்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த புதிய வரையறையை, கடந்த நவ., 20ம் தேதி உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. அதாவது புதிய வரையறையின்படி குன்றுகள் மலைத்தொடரில் இருந்து நீக்கப்படும்போது சுரங்க வேலைகள் நடக்கலாம். ஆக்கிரமிப்புகளால் பசுமை காடுகள் அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகள் உருவாகலாம். இதனால், வெகு விரைவிலேயே ஆரவல்லி மலைத்தொடர் காணாமல் போய்விடலாம் என அச்சம் எழுந்துள்ளது. அதுதான், நாடு தழுவிய அளவில் போராட்டத்திற்கும் காரணமாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழன் மணி
டிச 30, 2025 02:19

இந்திய நாடு ஏல விற்பனைக்கு தொடக்க விலை ₹1000 ஏலம் எடுப்பவர்கள் பட்டியலில் அதானி மட்டுமே தேர்வாகியிருப்பதால், ஏலம் எடுப்பவர்கள் கேட்கலாம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி