உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உச்ச நீதிமன்றத்தின் வைர விழா: "ஒரு பட்டனை கிளிக் செய்தால், வழக்குகள் தாக்கல்": சந்திரசூட் பேச்சு

உச்ச நீதிமன்றத்தின் வைர விழா: "ஒரு பட்டனை கிளிக் செய்தால், வழக்குகள் தாக்கல்": சந்திரசூட் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்யும் வசதி இப்போது எங்களிடம் உள்ளது'' என உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுகையில் குறிப்பிட்டார்.உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை இன்று (ஜனவரி 28) பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பிரதமர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் தலைமை நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

800 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: உச்சநீதிமன்ற வளாகத்தை விரிவாக்கம் செய்ய 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்தை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து பலப்படுத்தியுள்ளது. தனிமனித உரிமைகள், பேச்சு சுதந்திரம் குறித்து உச்சநீதிமன்றம் பல முக்கியமான தீர்ப்புகளை வழங்கி உள்ளது. மாறிவரும் உலகளாவிய சூழ்நிலையில், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவை நோக்கி உள்ளது. நமது மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது:

தொழில்நுட்பம்

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும், முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான பாத்திமா பீவிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது பெருமைக்குரியது. நம்பகமான நீதித்துறையை உருவாக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு பல முடிவுகளை எடுத்து வருகிறது. ஏ.ஐ., தொழில்நுட்பம் உதவியுடன் எனது பேச்சு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நீங்கள் அதைக் கேட்கிறீர்கள். நீதிமன்றங்களில் தொழில்நுட்பம் இருந்தால், சாமானியர்களின் வாழ்க்கையை எளிதாக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சந்திரசூட் பேச்சு

நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்யும் வசதி இப்போது எங்களிடம் உள்ளது. இது 24மணி நேரமும் வழக்குகளைத் தாக்கல் செய்வதை, எளிமையாகவும், வேகமாகவும் ஆக்கி உள்ளது.கோவிட் காலத்தில் காணொளி வாயிலாக வழக்கு விசாரணைகள் நடைபெற்றது. நாட்டின் எந்தப் பகுதியிலும், அல்லது உலகின் எந்தப் பகுதியிலும் அமர்ந்திருக்கும் எந்தவொரு இந்திய வழக்கறிஞரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த நீதிமன்றத்தில் வாதிடலாம். இது உச்ச நீதிமன்றத்தை அணுகுவதை ஜனநாயகப்படுத்தியுள்ளது. தூரம் காரணமாக உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாதவர்களுக்கு இது உதவிக்கரமாக இருந்தது.மக்கள் அதிக அளவில், உச்சநீதிமன்றத்தை அணுகுவது, எவ்வளவு தூரம் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை காட்டுகிறது. இன்று நமது தேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம். உச்ச நீதிமன்றம் 1950 ஜனவரி 28ம் தேதி துவங்கப்பட்டது. இவ்வாறு சந்திரசூட் பேசினார்.

வரவேற்பு

உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பிரதமர் நரேந்திர மோடியை பி.ஆர்.அம்பேத்கரின் சிலையை கொடுத்து வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ