| ADDED : ஜூலை 28, 2011 03:34 AM
புதுடில்லி: காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் புரிந்ததாக சி.பி.ஐ.விசாரணையில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ,போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்கல்மாடிக்கு இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை பகுதியினை ஸ்கேன் செய்து பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக டில்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில், பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடந்ததாக, போட்டியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து சுரேஷ் கல்மாடி மீது புகார் கூறப்பட்டது. சி.பி.ஐ. விசாரணையில் இவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கல்மாடிக்கு ஞாபக மறதி நோய் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வதற்காக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் நீதிபதி தல்வாந்த்சிங் ,கல்மாடியை இதயம் மற்றும் நரம்பியல் சம்பந்தமான சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இன்று டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை பகுதியினை ஸ்கேன் செய்து உண்மையினை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிகிறது. பலத்த போலீஸ்பாதுகாப்புடன் எய்மஸ் மருத்துவமனையி்ல் தங்கியுள்ள கல்மாடியினை சந்திக்க உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக திகார் சிறைத்துறை செய்தி தொடர்பாளர் சுனில்குப்தா கூறினார்..