உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நுாலகமாக மாறும் பூங்கா: முன்மாதிரியான தமிழ் கலெக்டர்

நுாலகமாக மாறும் பூங்கா: முன்மாதிரியான தமிழ் கலெக்டர்

வார விடுமுறை வந்தால் போதும், பெரும்பாலான அதிகாரிகள், தங்கள் குடும்பத்துடன் பொழுது போக்கவும், வெளியே செல்லவும் விரும்புவர். ஆனால் உத்தரகன்னடா மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, தன் வார விடுமுறையை அர்த்தமுள்ளதாக கழிக்கிறார்.

மொபைல் போன்

இன்றைய காலத்தில், சிறியவர் முதல் முதியோர் வரை, பலரும் மொபைல் போனுக்கு அடிமையாக உள்ளனர். மொபைல் போன் வந்த பின், மக்களிடையே படிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. இன்றைய சிறார்களுக்கும் படிக்கும் பழக்கம் இல்லை.மக்களிடையே படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, உத்தரகன்னட மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். பொதுவாக அதிகாரிகள், வார விடுமுறையை தங்கள் குடும்பத்துடன் பொழுதுபோக்கவும், வெளியே செல்லவும் செலவிடுவர். ஆனால் லட்சுமி பிரியா, தன் வார விடுமுறையை அர்த்தமுள்ளதாக செலவிட்டு, மற்ற அதிகாரிகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார்.

இயற்கையுடன் படி

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை, 'இயற்கையுடன் படி' என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். இளம்சந்ததியினருக்கு, புத்தகம் படிப்பது மற்றும் இயற்கையின் மகத்துவத்தை புரிய வைப்பதே, இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியாவும், அவரது கணவரும் பூங்காவில் மக்களுடன் சேர்ந்து புத்தகம் படிக்கின்றனர்.வாரந்தோறும் ஞாயிறு அன்று, கார்வார் நகரின் காந்தி பூங்காவில் காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை புத்தகம் படிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.அன்றைய தினம் காந்தி பூங்கா, இரண்டு மணி நேரம் நுாலகமாக மாறுகிறது. பூங்காவில் நாளிதழ்கள், கதை, பொது அறிவு, போட்டி தேர்வு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், பொது மக்கள் இங்கு வந்து விருப்பமான புத்தகங்களை எடுத்து படிக்கலாம் அல்லது தாங்களே புத்தகங்கள் கொண்டு வந்தும் படிக்கலாம். தாங்கள் படித்த புத்தகங்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, மாவட்ட கலெக்டரிடம் தகவல் பகிர்ந்து கொள்ளலாம்.

பேருதவி

மாவட்ட கலெக்டருடன் சேர்ந்து படிக்கவும், சுதந்திரமாக பேசவும் வாய்ப்பு கிடைப்பதால், பல இளைஞர்கள், இளம் பெண்கள் பூங்காவுக்கு வருகின்றனர். சிறுவர், சிறுமியருக்கும் இந்நிகழ்ச்சி உதவியாக உள்ளது. விடுமுறையில், மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் பலருக்கு, 'இயற்கையுடன் படி' நிகழ்ச்சி படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கிறது.பூங்காவுக்கு படிக்க வரும் மாணவர்கள் கூறுகையில், 'ஞாயிறு விடுமுறையில் மொபைல் போனை வைத்து கொண்டு அமர்ந்திருப்போம். நேரத்தை வீணாக்குவோம். பூங்காவுக்கு படிக்க வருவதால் எங்களுக்கு படிக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது. படிப்புக்கும் உதவியாக உள்ளது' என்றனர்.தமிழகத்தின் தஞ்சாவூரை சேர்ந்தவர். கர்நாடகாவில் பல்வேறு அரசு பொறுப்புகளில் இருந்துள்ளார். சமீபத்தில் கர்நாடக மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து பாராட்டுகளை பெற்றவர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை