உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரிகளால் அளிக்கப்படும் சம்மன்களுக்கு வரி செலுத்துபவர்கள் ஒத்துழைக்க வேண்டும்

அதிகாரிகளால் அளிக்கப்படும் சம்மன்களுக்கு வரி செலுத்துபவர்கள் ஒத்துழைக்க வேண்டும்

புதுடில்லி,:'மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் வழங்கும் சம்மன்களுக்கு ஒத்துழைப்பதுடன், உரிய பதிலை, வரி செலுத்துபவர்கள் அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'ஆர்மர் செக்யூரிட்டி' என்ற பாதுகாப்பு நிறுவனம், வரி கோரிக்கை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மஹாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளதாவது: மத்திய மற்றும் மாநில வரி அதிகாரிகளால், வரி செலுத்துபவருக்கு சம்மன் அல்லது நோட்டீஸ் வழங்கப்பட்டால், அதற்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்கில் ஆஜராகி, தேவையான பதிலை வழங்க வேண்டியது அவர் கடமை. இது தொடர்பாக, வேறு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தால், அது தொடர்பாக, சம்மன் அனுப்பிய அதிகாரிக்கு, வரி செலுத்துபவர்கள் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது விசாரணை சமயத்திலோ தெரிவிக்க வேண்டும். வரி செலுத்துபவரின் இந்த கருத்தை அதிகாரிகள் சரிபார்த்தல் அவசியமாகிறது. சம்மன் அனுப்பிய அதிகாரி, ஏற்கனவே விசாரித்து வரும் அதிகாரியை தொடர்பு கொண்டு, அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். இந்த நடவடிக்கை, தேவையற்ற விசாரணையை தவிர்க்கும். அதேசமயம், துறையின் நேரம், முயற்சி மற்றும் வளங்களை உரிய முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்யும். இரு விசாரணையும், வெவ்வேறு பொருள் விஷயங்களை கொண்டிருந்தால், அதற்கான அறிவிப்பு, காரணங்கள் மற்றும் வரி தொடர்பான விபரக் குறிப்புடன் வரி செலுத்துபவருக்கு எழுத்துப்பூர்வமாக தெரியப்படுத்த வேண்டும். இருப்பினும், மத்திய அல்லது மாநில வரி ஆணையம், வழக்குப்படி, விசாரிக்கப்படும் விஷயம் ஏற்கனவே வேறொரு ஆணையத்தின் விசாரணைக்கு உட்பட்டிருந்தால், விசாரணையை யார் துவங்குவது என்பதை அவர்களே முடிவு செய்யலாம். இந்த சூழலில், பிற ஆணையம் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தகவல்கள் அனைத்தையும், சம்பந்தப்பட்ட ஆணையத்துக்கு முறையாக அனுப்ப வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை