உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  வாக்கிங் சென்ற ஆசிரியர் சுட்டுக்கொலை: அலிகார் முஸ்லிம் பல்கலையில் பயங்கரம்

 வாக்கிங் சென்ற ஆசிரியர் சுட்டுக்கொலை: அலிகார் முஸ்லிம் பல்கலையில் பயங்கரம்

அலிகார்: உத்தர பிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலை வளாகத்தில், நடைபயிற்சி சென்ற பள்ளி ஆசிரியர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். உ.பி.,யின் அலிகாரில், அலிகார் முஸ்லிம் பல்கலை செயல்பட்டு வருகிறது. இங்கு, உத்தர பிரதேசம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயின்று வருகின்றனர். பல்கலை வளாகத்தில் ஏ.பி.கே., உயர் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அலிகார் முஸ்லிம் பல்கலையால் நிர்வகிக்கப்படும் இந்த பள்ளியில், கணினி அறிவியல் பாட ஆசிரியராக ராவ் டேனிஷ் அலி என்ற டேனிஷ் ராவ் பணியாற்றி வந்தார். கடந்த 11 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றிய இவர், பல்கலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திய பின், டேனிஷ் ராவ், நண்பர்கள் இருவருடன் பல்கலை வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார். இரவு 9:00 மணிக்கு மவுலானா ஆசாத் நுாலகம் அருகே சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரை வழிமறித்தனர். அதில் ஒருவன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டேனிஷ் ராவை நோக்கி சரமாரியாக சுட்டான். முன்னதாக அவரிடம், 'உனக்கு என்னை தெரியாது; இப்போது தெரிந்து கொள்வாய்' என, கூறிவிட்டு சுட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, வாகனத்தில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில், தலை, முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் டேனிஷ் ராவுக்கு படுகாயங்கள் ஏற்பட்டன. அவருடன் வந்தவர்கள் டேனிஷ் ராவை உடனடியாக பல்கலைக்கு சொந்தமான மருத்துவமனையில் சேர்த்தனர். பின், உயர் சிகிச்சைக்காக ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லுாரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், டேனிஷ் ராவ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள மவுலானா ஆசாத் நுாலகம் மற்றும் அதன் அருகில் உள்ள கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி