உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுவன் கொலை செய்யப்பட்ட சீலம்பூரில் பதற்றம்: போலீஸ், துணை ராணுவம் தீவிர ரோந்து

சிறுவன் கொலை செய்யப்பட்ட சீலம்பூரில் பதற்றம்: போலீஸ், துணை ராணுவம் தீவிர ரோந்து

புதுடில்லி:சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதை அடுத்து, பதற்றம் அதிகரித்ததால், சீலம்பூரில் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.வடகிழக்கு டில்லி சீலம்பூர் ஜெ பிளாக்கில் நேற்று முன் தினம் இரவு, 7:40 மணிக்கு, குணால்,17, என்ற சிறுவனை சிலர் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினர். அங்கிருந்த மக்கள், குணாலை மீட்டு அருகில் உல்ள ஜே.பி.சி. மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், குணால் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.இந்தக் கொலை காரணமாக சீலம்பூரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி பல இடங்களில் சீலம்பூர்வாசிகள் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் சீலம்பூரில் குவிக்கப்பட்டனர். போலீஸ் இணை கமிஷனர் புஷ்பேந்திர குமார் கூறியதாவது:குணால் கொலை தொடர்பாக சீலம்பூரைச் சேர்ந்த சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. அதில் இருவரை போலீசார் நெருங்கி விட்டனர்.சீலம்பூரில் ஏற்கனவே ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்கவே, அந்த இளைஞரின் சகோதரி குணால் கொலைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.சீலம்பூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீஸ் மட்டும் துணை ராணுவப் படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து தெருக்களிலும் ரோந்துப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. குணால் கொலை தொடர்பாக சீலம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். குணால் கொலை தொடர்பாக, பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையிலும் அறிக்கைப் போர் ஏற்பட்டுள்ளது.சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஆதிஷி சிங், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:மத்திய பா.ஜ., அரசும், டில்லி மாநகரப் போலீசும் டில்லி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறி விட்டது. சீலம்பூரில் சிறுவன் கொலை செய்யப்பட்டு இருப்பது, தலைநகர் டில்லியில் சட்டம் ஒழுங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு.டில்லி மாநகரப் போலீசை நிர்வகிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன செய்கிறார்? டில்லியின் இரட்டை இயந்திர அரசு என்ன செய்கிறது?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த வடகிழக்கு டில்லி பா.ஜ., - எம்.பி., மனோஜ் குமார் திவாரி கூறியதாவது:சீலம்பூரில் குணால் என்ற 17 வயது தலித் சிறுவன் கொலை செய்யப்பட்டு இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. அப்பகுதி மக்களிடையே கோபம் ஏற்பட்டு இருப்பதும் மிகவும் இயல்பானது. போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அடிக்கடி பேசி வருகிறேன். குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். சீலம்பூர் மக்கள் அமைதி காக்க வேண்டும். போலீஸ் நடவடிக்கைகளுக்கு மக்கள் இடையூறு செய்யக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

நீதி கிடைக்கும்

கொலை செய்யப்பட்ட சிறுவன் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும். டில்லி மாநகரப் போலிஸ் கமிஷனரிடம் விசாரித்தேன். இந்தக் கொல வழக்கில் போலீசார் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.ரேகா குப்தா, முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை