உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழ் உட்பட சிறுபான்மை மொழிக்கு பாதுகாப்பு தங்கவயல் தமிழ்ச் சங்க தலைவர் கலையரசன் விருப்பம்

தமிழ் உட்பட சிறுபான்மை மொழிக்கு பாதுகாப்பு தங்கவயல் தமிழ்ச் சங்க தலைவர் கலையரசன் விருப்பம்

தங்கவயல், : ''கர்நாடகாவில் தமிழ் உட்பட சிறுபான்மை மொழிகளின் பாதுகாப்புக்கும், அதன் இலக்கிய வளர்ச்சிக்கும், கர்நாடக அரசு உதவிட வேண்டும்,'' என்று தங்கவயல் தமிழ்ச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் நேற்று கூறியதாவது:கர்நாடகாவில் பெங்களூரு, தங்கவயல் உட்பட பல இடங்களில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மன்னர் ஆட்சியின் அடையாளங்கள் உள்ளதை, கல்வெட்டுகள் எடுத்து காட்டுகின்றன.

தமிழ் மாயம்

சோழர் மன்னர் ஆட்சியில் கட்டப் பட்ட பால சோமேஸ்வரர் கோவிலைச் சுற்றி செதுக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் உள்ள பெரும்பாலான கற்களை காணவில்லை. பழைய மாரிகுப்பம் கிராமத்தில் ஈஸ்வரன் கோவிலில் இருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் மாயமாகி உள்ளன.தொல்லியல் ஆய்வாளர்கள், 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்து விளக்கம் அளித்து உள்ளனர். இதில் பல தமிழ் கல்வெட்டுகள் காணாமல் போய் வருகின்றன.கேசம்பள்ளியில் உள்ள சிவாலயத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் பல உள்ளன. கோவிலை புதுப்பிக்கும் வகையில் பழைய தமிழ் எழுத்துகளே இல்லாமல் போகிறது.கோலார் மாவட்டத்தில் சோழர் காலத்தின் கோலாரம்மா கோவில் உட்பட பழமையான கோவில்கள் வரலாற்றை காட்டுகிற கல்வெட்டுகளை அரசு பாதுகாக்க வேண்டும்.

அரசுடைமை

கர்நாடக அரசின் பட்ஜெட்டில் கொங்கணி, துளு மொழி வளர்ச்சிக்கு அரசு உதவுவதாக அறிவித்துள்ளது. இது போன்று, தமிழ் உட்பட பிற சிறுபான்மை மொழிகளுக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது.வணிக நிறுவனங்கள், அலுவலகங்களின் பெயர் பலகைகளில் மாநில மொழிக்கு 60 சதவீதமும், மற்ற மொழிகளுக்கு 40 சதவீதமும் பயன் படுத்திக்கொள்ள அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது. இதன் மூலம், தமிழர் நிறைந்த பகுதிகளில் 40 சதவீதம் தமிழில் எழுத எந்த தடையும் இல்லை என்பது அர்த்தமாகிறது. இந்த உத்தரவை தங்கவயல் தமிழர்கள் ஏற்போம்.திருக்குறளை, கர்நாடக அரசு அரசுடமையாக்க வேண்டும். உயர் நிலைப் பள்ளி, கல்லுாரி வகுப்புகளில் கட்டாய பாடமாக்க வேண்டும்.கர்நாடக மாநில எல்லையோர பகுதிகளின் வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திர மாநிலங்களின் எல்லையில் உள்ள தங்கவயலின் வளர்ச்சிக்கும் உதவிட அரசு முன் வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.� தமிழ் கல்வெட்டுகள் உள்ள சிவாலயம் - கேசம்பள்ளி. �  பழைய மாரிகுப்பம் பகுதியில் இருந்த தமிழ் கல்வெட்டுகள் மாயமாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ