உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டுக்கோட்டை நகரத்தார் காசியில் கட்டிய 10 மாடி தர்ம சத்திரம்: திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி

நாட்டுக்கோட்டை நகரத்தார் காசியில் கட்டிய 10 மாடி தர்ம சத்திரம்: திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி: உத்தர பிரதேசத்தின் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார், ரூ.60 கோடி செலவில் கட்டிய 10 மாடி தர்ம சத்திரத்தை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

மகத்தான மாற்றம்

நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில் காசியில் கட்டிய 10 மாடி தர்மசத்திரம் திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். அது மீண்டும் வெல்லும். இனி இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அதற்கு ஆதாரமாக தான் இந்த பிரம்மாண்ட கட்டடம் இந்த இடத்தில் எழுப்பி உள்ளது. யாரால் ஆக்கிரமிக்கப்பட்டாலும், அது காலத்தை கடந்து பல வருடங்கள் ஆனாலும் நீதியும் சத்தியமும் மீண்டும் நிலைாநாட்டப்படும் என்பதை தான் இது காட்டுகிறது. 2020 ல் எம்பியாக காசிக்கு வந்தேன். பிரதமர் மோடி, காசியின் வேட்பாளராக முதல்முறை போட்டியிட்ட நேரத்தில் தேர்தல் வேலைக்காக இங்கு வந்தேன். கிராமத்தில் ஒரு வாக்காளரிடம் பேசும் போது அவர், 'இங்கு எந்த மாற்றமும் வரப்போவது இல்லை' என்றார். ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காசிக்கும், இப்போதுள்ள காசிக்கும் சம்பந்தமேயில்லை. மகத்தான மாற்றங்களுக்கு சொந்தமாக மாறியிருக்கிறது. இதற்கு பிரதமர் மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் காரணம். மனதும் முயற்சியும் இருந்தால் உலகத்தில் முடியாதது எதுவும் இல்லை.

பெருமை

ரூ.60 கோடியில் தர்மசத்திரம் எழுந்து நிற்கிறது. இதற்கு கடன் வாங்கவில்லை. நன்கொடையால் சாத்தியமாகியிருக்கிறது. அப்படி இனிய கட்டடத்தை கலாசார பிணைப்பை இணைப்பை காசிக்கும், தமிழகத்துக்கும் இணைப்பை உருவாக்கும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

பிரதமரின் முயற்சி

சிவனிடம் இருப்பிடமாக முதலாவதாக வருவது காசிதான். காசி நகரில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன என்பதை பார்க்கும் போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.இது மிகவும் அற்புதமானது. இந்த மாற்றம் பிரதமர் மோடியின் பிரியத்தையும் முயற்சியையும் பிரதிபலிக்கிறது. யோகி அரசின் முயற்சி காரணமாக இந்த மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

ஆன்மீக தலைநகரம்

இந்த காசி நகரில் உலகின் பழமையான நகரங்களில் ஒன்று என்பதை யாராலும் மறக்க முடியாது. உலகின் ஆன்மீக நகரம் எது என்று கேட்டால் காசி என்று எளிதாக கூற முடியும். இந்நகரில் மட்டும் 72 ஆயிரம் கோவில்கள் இருப்பதாக அறிகிறோம். நம்புகிறோம். இங்கு இருக்கும் காற்றிலும் மண்துகளிலும் ஓம் நமச்சிவாய என்ற சிவ மந்திரம் என்றைக்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. காசிக்கு புனித யாத்திரை வந்தால் அது நிறைவடைய ராமேஸ்வரம் செல்ல வேண்டும். தெற்கே இருப்பவர்கள் காசிக்கு வருவதும், காசியில் இருப்பவர்கள் ராமேஸ்வரம் செல்வதும், ஆயிரம் ஆண்டுகள் தொடர்கதையாக தொடர்கிறது. இந்த கலாசார பிணைப்பை, இணைப்பை, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்துகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், துறவிகள் காசிக்கு வந்து ஞானம், தெய்வ அருள் பெற்றனர். குமரகுருபரர் இங்கு வந்து மடத்தை நிறுவியுள்ளார். ஒரு கோவிலை கட்டியுள்ளார். பாரதியார் இங்கு வந்துள்ளார்.காசி அரசவையில் அங்கம் வகித்துள்ளார். அதனால் தான் பாரதியார் 'செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையான்' என்று பாடினார். தேசத்தின் ஒற்றுமையை பற்றி நாம் உணர்வதற்கு காரணமாக இருக்கும் புனித நகரம் காசி என்பதில் நமக்கு பெருமை தான்.

நோக்கம்

நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் 1863 ம் ஆண்டு துவங்கப்பட்டதாக அறிகிறேன். அப்படி பழமையான காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சத்திரம், தமிழகத்தில் இருந்து காசிக்கு வரும் பக்தர்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்குவதே நோக்கம் . நேற்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி என்றைக்கும் சரி அதுவே நோக்கம்.ஜார்க்கண்ட் கவர்னராக நான் காசிக்கு வந்த போது நம்முடைய நகரத்தார் சங்கத்தில் இருந்து தான் தினமும் பூஜைப் பொருட்கள் காசி கோவிலுக்கு எடுத்து செல்வது வழக்கம் என்பதை முதல்வர் யோகி குறிப்பிட்டார். அதில் நானும் கவர்னராக நடந்து சென்று இறைவனை வழிபடும் வாய்ப்பை நகரத்தார் வழங்கினார். பூஜை பொருட்களை எடுத்து செல்லும் போது வழியில் நிற்பவர்கள், ' சம்போ சம்போ சங்கர மஹாதேவா என்று ஒலிப்பதை கேட்க முடிகிறது. அதனால் இந்த வழக்கத்தை சம்போ என அழைக்கின்றனர்.இதில் ஒரு ஆச்சர்யம், 1942 ல் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட ஆங்கிலேயே அரசு கூட 'சம்போ' நிகழ்ச்சியை தடை செய்யவில்லை.

மீட்பு

கடந்த காலத்தில் நம்முடைய கலாசார பெருமைகளை பலரும் திருடி சென்றுள்ளனர். நம்முடைய தெய்வங்களின் சிலைகள் கடத்தப்பட்டு இருக்கிறார்கள். சில பேர் கூட கேட்பார்கள் ' சாமிக்கே தன்னுடைய சிலையை காப்பாற்ற முடியாத போது மக்களை எப்படி காப்பாற்றும்' என்று கேட்பார்கள்.அது அப்படி அல்ல. ' அரசன் அன்று கொல்வான். தர்மம் நின்று கொல்லும்' என்பது தான் நமது அர்த்தம். காணாமல் போன நமது கடவுள் சிலைகள் இன்று பாரத புண்ணிய பூமிக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அன்னபூரணி சிலை கனடாவில் இருந்து 2021 ல் திரும்ப கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி கடுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார். 55 சிலைகள், ஆயிரக்கணக்கான கலைப்பொருட்கள் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டுள்ளது. அந்த இரண்டு கர்மயோகிகள் பொறுப்பேற்று கொண்ட பிறகு காசி தெருக்களில் ஹரஹர மகாதேவா கோஷம் முன்பை விட பெருமையாகவும் சுதந்திரமாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ஆக்கிரமிப்பு

நகரத்தார் தர்ம சத்திரம் கட்டியுள்ள இடம் சமாஜ்வாதி கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. பாஜ அரசு உபி மாநிலத்தில் அமைந்த பிறகு அந்த இடம் மீட்கப்பட்டு நகரத்தார் சமூகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடத்தில் தான் இந்த பிரம்மாண்ட தர்மசத்திரம் கட்டப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Naagarazan Rs
நவ 01, 2025 05:47

நகரத்தார்களுக்கு தரும சிந்தனை நிறைய உண்டு. அவர்கள் அருள் பணி போற்றுதற்குரியது .வாழ்க வளமுடன்


மோகன்
நவ 01, 2025 00:59

வாழ்க வளமுடன் வாழிய பல்லாண்டு ந.மோகனசுந்தரம், திருநெல்வேலி


ஜெய்ஹிந்த்புரம்
நவ 01, 2025 00:25

2014-இல் இவர் சந்தித்ததாக கூறப்படும் அதே கிராமத்து வாக்காளர், அவரது தனிப்பட்ட பொருளாதார நிலைமையில் உதாரணமாக, வருமானம், வீடு அல்லது அடிப்படை வசதிகள் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல், அதே வறுமை நிலையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகிறார் என்பது ஒரு முக்கியமான உண்மையாகும்.


SRIDHAAR.R
நவ 01, 2025 06:20

காசிக்கு போய் இருக்கிறிர்களா பார்த்த மாதிரியே பேசுகிறீர்கள்


Sudarsan Ragavendran
நவ 01, 2025 07:16

பொறாமை


ஜெய்ஹிந்த்புரம்
நவ 01, 2025 00:25

2014-இல் இவர் சந்தித்ததாக கூறப்படும் அதே கிராமத்து வாக்காளர், அவரது தனிப்பட்ட பொருளாதார நிலைமையில் உதாரணமாக, வருமானம், வீடு அல்லது அடிப்படை வசதிகள் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல், அதே வறுமை நிலையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகிறார் என்பது ஒரு முக்கியமான உண்மையாகும்.


jkrish
நவ 01, 2025 00:16

இந்த படம் சொல்லும் மற்றொரு அல்லது அபூர்வ செய்தி மாதிரி மந்திரி பங்கு பெற்றது தான்.


T.Senthilsigamani
அக் 31, 2025 21:53

நல்ல செய்தி


aaruthirumalai
அக் 31, 2025 21:29

இந்த செய்தியில் உள்ளது போல் உணர்ந்தேன், அற்புதமான ஒரு பயணம். இந்துக்கள் எல்லோரும் ஒருமுறை காசி விஸ்வநாதரை தரிசித்து வரவேண்டும்.


aaruthirumalai
அக் 31, 2025 21:21

பழைய சத்திரத்தில் கடந்தாண்டு தங்கியிருந்தேன் மனநிறைவுடன் திருப்தியாக அந்த நாட்கள் கடந்தது.


உண்மை கசக்கும்
அக் 31, 2025 20:29

மிக பெருமையான நிகழ்வு. வாழ்த்துக்கள்


சமீபத்திய செய்தி