உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனம் மயக்கும் முத்தோடி வனம்

மனம் மயக்கும் முத்தோடி வனம்

கான்கிரீட் கட்டடங்கள் நிரம்பியுள்ள நகரங்களில் வாழ்ந்து, நொந்து, வெந்து போன மக்கள், முத்தோடி வனப்பகுதிக்கு வரலாம். மனம் போனபடி சுற்றி திரிந்து, மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி பெறலாம். ஒரு முறை வந்து பாருங்கள்.கர்நாடகாவின், சிக்கமகளூரு மாவட்டம் என்ற பெயரை கேட்டாலே, இங்குள்ள பசுமை சூழ்ந்த வனப்பகுதிகள், மலைகள், குன்றுகள், நீர் வீழ்ச்சிகள் கண் முன்னே வந்து செல்லும். இவற்றில் முத்தோடி வனப்பகுதியும் ஒன்றாகும். 300க்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான பறவைகள், 33க்கும் மேற்பட்ட புலிகள், 445 காட்டு யானைகள், காட்டெருமைகள், 119 சிறுத்தைகள், மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள், அபூர்வமான மரங்கள் இங்குள்ளன.மேலும், 300 ஆண்டுகள் பழமையான, சாகுவானி இன மரத்தையும், முத்தோடியில் காணலாம். ஐந்தாறு பேர் சேர்ந்தால்தான் மரத்தை கட்டிப்பிடிக்க முடியும். பசுமையான புற்கள், ஆறுகள், நீர் வீழ்ச்சிகள், இயற்கை காட்சிகள் மனதை கொள்ளை கொள்ளும். இதை ரசிக்க சுற்றுலா பயணியர் பெருமளவில் வருகின்றனர். வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, மிக அதிகமாக இருக்கும்.வனத்தின் நடுவில் சபாரி சென்றால், மனதுக்கு குஷியாக இருக்கும். முத்தோடி வனத்தின் அழகை, குவெம்பு, தேஜஸ்வி உட்பட, பல்வேறு கவிஞர்கள் தங்கள் படைப்புகளில் வர்ணித்துள்ளனர்.கல்லும், மண்ணும் நிறைந்த கரடு, முரடான பாதையில் நடந்து சென்றால், வன விலங்குகள் சுற்றி திரிவதை பார்க்கலாம். 'எந்த மாடல்களுக்கும், நாங்கள் சளைத்தவர்கள் அல்ல' என்று கேமராக்களுக்கு போஸ் கொடுக்கும். யாருக்கும் பயப்படாமல் கூட்டம், கூட்டமாக துள்ளித்திரியும் மான்கள், தோகை விரித்தாடும் மயில்கள் என, பல்வேறு விலங்குகள், பறவைகளை காணலாம்.வனத்தின் மத்திய பகுதிக்கு சென்றால், சாகுவானி மரத்தை காணலாம். அதை தாண்டி உள்ளே சென்றால், பிரிட்டிஷார் கட்டிய கெஸ்ட் ஹவுஸ் தென்படும். இது நுாற்றாண்டு பழமையானது. 1910ம் ஆண்டில் 3,450 ரூபாய் செலவில் கட்டப்பட்டது. கெஸ்ட் ஹவுசை கடந்து சென்றால், ஓடைகள், சோமாவதி ஆற்றை காணலாம். ஆற்றங்கரையில் நடந்து சென்றால், சில்லென குளிர் காற்று முகத்தில் வருடும். இதை அனுபவிக்க அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.தரிகெரே அருகில், லக்கவள்ளியில் உள்ள பத்ரா வனப்பகுதியில் சபாரி சென்றால், வன விலங்குகள் அதிகம் தென்படும். ஆனால் முத்தோடியில் விலங்குகளை காண, அதிர்ஷ்டம் வேண்டும். ஏனென்றால் இங்கு விலங்குகள் அபூர்வமாகத்தான் கண்களில் படும்.

எப்படி செல்வது?

சிக்கமகளூரில் இருந்து, 32 கி.மீ., தொலைவில், கார்த்திக் எஸ்டேட்டுக்கு 25 கி.மீ., தொலைவில் முத்தோடி வனப்பகுதி உள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து, சிக்கமகளூருக்கு அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள், ரயில்கள் இயங்குகின்றன. சிக்கமகளூரை அடைந்து, இங்கிருந்து முத்தோடிக்கு சென்று, ஜீப்பில் சபாரி செல்லலாம். காலை 7:00 மணி முதல், 9:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல், 6:00 மணி வரை சபாரி செல்ல அனுமதி உள்ளது. -நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை