நம் ராணுவம் பந்தாடிய பாக்., விமானங்களை பழுது நீக்கி தந்தது அமெரிக்க அரசு
புதுடில்லி : ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, நம் ராணுவம் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த 'எப் - 16' ரக பாக்., போர் விமானங்கள், ரேடார்களை அமெரிக்கா பழுதுநீக்கி தந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக நம் ராணுவம் நடத்திய, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் அந்நாட்டின் ராணுவ உள்கட்டமைப்புகள் குறிவைத்து தகர்க்கப்பட்டன. முட்டுக்கட்டை குறிப்பாக, ஜகோபாபாதில் உள்ள ஷபாஸ் விமானப்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க தயாரிப்பான, 'எப் - 16' ரக போர் விமானங்கள் இரண்டு சேதமடைந்தன. ராவல்பிண்டி நுார் கான் விமானப்படை தளத்தில், 'எப் - 16' ரக போர் விமானம் மற்றும் அமெரிக்க, 'ஹெர்குலீஸ்' என்றழைக்கப்படும், 'சி - 130' விமானங்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டன. அதே போல் சர்கோதா, ரஹிம்யார் கான் மற்றும் முஷாப் விமானப்படை தளங்களில் இருந்த ஓடுபாதைகள், ஹேங்கர்கள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவையும் நம் விமானப்படை தாக்குதலில் கடுமையாக சேதமடைந்தன. இதனால் செய்வதறியாது திகைத்த பாகிஸ்தான் அரசு, சேதங்களை செப்பனிட ரகசிய அவசரகால நிதியில் இருந்து, 3,900 கோடி ரூபாய் வரை கடந்த மே மாதம் ஒதுக்கியது. இந்நிலையில், சேதங்களை சரிசெய்ய சீனா, முன்வந்தபோது, 'எப் - 16' ரக போர் விமானங்களின் தொழில்நுட்பங்கள் எங்கே சீனாவால் திருடப்பட்டு விடுமோ என அஞ்சி, அமெரிக்கா அதற்கு முட்டுக்கட்டை போட்டது. வெள்ளமே காரணம் இதனால், பழுது நீக்க அமெரிக்காவே உதவ வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து தோஹா, அபுதாபி மற்றும் அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் இருந்த அமெரிக்க சிறப்பு நிபுணர்கள் குழுவை, டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள், சேதமான ராணுவ உள்கட்டமைப்புகளை சரிசெய்து தந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. நம் ராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட பெரும்பாலான சேதங்களை அமெரிக்கா சீர்படுத்தி கொடுத்தாலும், ரஹிம்யார் கான் விமானப்படை ஓடுதளம் இதுவரை செப்பனிடப்படவில்லை என தெரிகிறது. அதற்கு தெற்கு பஞ்சாபில் ஏற்பட்ட கடுமையான வெள்ளமே காரணம் என கூறப்படுகிறது. இதற்கிடையே, எதிர்காலத்தில் இந்திய தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் அதிநவீன ரேடார் அமைப்புகளை, அமெரிக்கா மற்றும் சீனாவிடம் இருந்து வாங்கவும் பாகிஸ்தான் விமானப்படை முடிவு செய்துள்ளது.