வலை வளை: நவ. 29
வாலிபரின் ‘ரீல்ஸ்’ மோகம் வரம்பு மீறியது சேட்டை பீஹாரில் வாலிபர் ஒருவர், ஓடும் பைக்கின் இருக்கையில் நேராக நின்று, பின்னால் நெருக்கமாக வந்த லாரிக்கு முன், ‘போஸ்’ கொடுக்கும் ஆபத்தான சாகச வீடியோ பரவி வருகிறது. வலைதளவாசிகள் பலரும், ‘அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்கின்றனர். ‘அவர் தன்னை மட்டுமின்றி சாலையில் செல்லும் மற்றவர்களையும் ஆபத்தில் தள்ளுகிறார்’ என, வலைதளவாசிகள் குற்றஞ்சாட்டினர். சமூக ஊடக புகழுக்காக சாலைகளில் இத்தகைய சாசகம் செய்யும் போக்கு குறித்து பலரும் வருத்தப்பட்டனர். கழிவை வீசுவது குற்றமா? தட்டி கேட்பது குற்றமா? டில்லியைச் சேர்ந்த, ‘கன்டென்ட் கிரியேட்டர்’ கமல் சவுத்ரி, மேம்பாலத்திலிருந்து யமுனை ஆற்றில் கழிவை கொட்டிய ஒருவரை தட்டிக் கேட்டார். சண்டைக்கு வந்த அந்த நபர், ‘செருப்பால் அடிப்பேன், முடிந்தால் தடு’ என, மிரட்டி விட்டுச் சென்றார். சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்வோரை தொடர்ந்து தட்டிக் கேட்கும் வீடியோக்களை பகிர்பவர் கமல் சவுத்ரி. ‘ஆற்றை காக்கப் பேசுவது குற்றமா’ என, வருத்தப்பட்ட கமல் வீடியோவை பார்த்த பலரும், குப்பை கொட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். கம்பத்தில் சிக்கியது நாய் காப்பாற்றினார் இளைஞர் டில்லியில், பால்கனியிலிருந்து விழுந்த நாய், தெருவிளக்கு கம்பத்தில் உயரமான இடத்தில் சிக்கியது. அதன் மேலே ஏறி மீட்பதற்கு ஆளில்லை. நாயின் உரிமையாளரான குடும்பத்தினர் தவிப்புடன் காத்திருந்த நிலையில் அங்கு வந்தார் மோஹித் என்ற இளைஞர். நீண்ட நேரம் கத்தியபடி உயிருக்கு போராடிய நாயை, தைரியமாக கம்பத்தில் ஏறி மீட்டார். அவரது பாராட்டுக்குரிய செயலை, கீழே இருந்தவர்கள் ஆரவாரம் செய்தபடி படம் பிடித்தனர். வீடியோவை பார்த்த பலரும், ‘மனிதநேயம் அழியவில்லை’ என, பதிவிட்டனர். ரயில் உணவுடன் வந்தது ஸ்பெஷல் ‘போல்ட்’ வடை பெங்களூரு – -பெலகாவி வந்தே பாரத் ரயிலில் பயணித்த சமர்த் கோடியாலுக்கு, உணவாக வழங்கப்பட்ட வடையில் இரும்பு ‘போல்ட்’ இருந்தது. இரண்டாக பிய்த்த வடையும் அருகில் போல்ட்டும் இருக்கும் வீடியோவை, ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்த அவர், தன் வேதனையை தெரிவித்தார். வருத்தம் தெரிவித்த ரயில்வே நிர்வாகம், உணவு சப்ளை செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. வலைதள பிரியர் ஒருவர், ‘இது இரும்புச்சத்து கொண்ட உணவு’ என்றார். இன்னொருவர், ‘இது ஸ்பெஷல் போல்ட் வடை’ என்று கூற, ‘கிச்சனில் மெட்டல் டிடெக்டர் இல்லையா’ என்றார் மற்றொருவர். தோழிக்கு திருமணம் ரயிலில் விழாக்கோலம் திருமணம் செய்யப் போகும் இளம்பெண்ணுக்கு, மும்பை மின்சார ரயிலில் அவரது தோழியர் விழா நடத்தியது, விமர்சனங்களை கிளப்பியது. ரயில் பெட்டியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து தோரணங்கள் கட்டி வண்ண வண்ண அலங்காரம் செய்திருந்த அந்த பெண்கள், உற்சாகமாக விழாவை கொண்டாடினர். வலைதளத்தில் வெளியான வீடியோவை கண்ட பலரும், ‘இது போன்ற தனிப்பட்ட விழாக்களை ரயிலில் நடத்தக்கூடாது’ என்றனர். ‘கூட்டம் நிரம்பி வழியும் ரயிலில் இது போன்ற நிகழ்ச்சிகள் தேவையா’ என்றும் கேட்கின்றனர், வலைதளவாசிகள். மராத்தி பாடலுக்கு எல்லை கடந்த மரியாதை மராத்தியில் புகழ் பெற்ற, ‘அப்சரா ஆலி’ என்ற பாடலை பாகிஸ்தானைச் சேர்ந்த, ‘இன்ஸ்டா’ பிரபலம் நோமல் ராவ் தன் பாணியில் பாடியது, வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. 2010-ல் வெளியான நடரங் படத்தில், அஜய்- அதுல் இசையில், பேலா ஷெண்டே பாடிய இந்த பாடல், லாவணி தாளத்துக்கு பெயர் பெற்றது. பின்னணி இசை ஒலிக்க, கண்களை மூடி மெட்டில் மூழ்கியவராக பாடுகிறார் நோமல். ‘நான் பாடியதை மராத்தியர்கள் ஏற்கிறீர்களா’ என்றும் தன் பதிவில் கேட்டார் அவர். பலரும், அவர் பாடியதை ஏற்பதாக கூறி பாராட்டி வருகின்றனர்.