உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட தடை இல்லை ! ஆதார் அட்டையை ஏற்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பீஹாரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட தடை இல்லை ! ஆதார் அட்டையை ஏற்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

'பீஹாரில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது' என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பான அனைத்து மனுக்களையும் விசாரித்து முடித்த பின் இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளது. பீஹார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டது. கடந்த வாரம் இந்த பணி முடிவடைந்த நிலையில், ஆக., 1ம் தேதி திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மல்யா பாக்சி அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மறுப்பு

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ''ஆக., 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால், அந்த பட்டியலே இறுதியாகி விடும்,'' என வாதாடினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு தற்போதைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. இந்த விவகாரம் முழுமையாக விசாரித்த பின், இறுதி முடிவு எடுக்கப்படும்,' என்றனர். ''அப்படியெனில், இவ்வழக்கின் அடுத்த விசாரணையை ஆக., 1ம் தேதிக்குள் விசாரிக்க வேண்டும்,'' என வழக்கறிஞர் சங்கரநாராயணன் வலியுறுத்தினார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின்னரும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான விண்ணப்பங்களை ஏற்போம் என தேர்தல் ஆணையம் தன் அறிக்கையில் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது. நீதிமன்றத்தை நம்புங்கள். வரைவு வாக்காளர் இறுதி பட்டியல் வெளியான பின்னரும், அதில் ஏதேனும் சிறு தவறு நடந்திருப்பதாக கண்டறியப்பட்டால், நீதிமன்றம் மொத்தமாக ரத்து செய்து விடும். எனவே, பதற வேண்டாம். இவ்வாறு தங்களது உத்தரவில் நீதிபதிகள் கூறினர். அறிவுறுத்தல் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வாக்காளர் திருத்த பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இரு ஆவணங்களுமே உண்மையானது தான் என கூறியுள்ளது. 'ரேஷன் கார்டுகளை கூட எளிதாக போலியாக தயாரிக்க முடியும். ஆனால், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை அப்படி தயாரிக்க முடியாது. அதற்கென தனி உண்மைத்தன்மை இருக்கிறது' என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ''குடியுரிமைக்கான ஆதாரமாக, ஆதார் அட்டையை ஏற்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டையும் நம்பகமானது அல்ல,'' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சூர்யகாந்த், ''இந்த பூமியில் எந்தவொரு ஆவணத்தையும் போலியாக தயாரித்து விடலாம். இதை மறுக்க முடியாது. எனவே, தேர்தல் ஆணையம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளை நம்பகமான ஆவணமாக ஏற்க வேண்டும். ''ஒரு வாக்காளரின் ஆதாரில் சந்தேகம் இருந்தால், அதற்கேற்றபடி பிற ஆவணங்களை கேட்டு பெறும் நடவடிக்கையை தொடரலாம்,'' என்றார். இதை தொடர்ந்து, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஆவணமாக ஏற்பதாக தேர்தல் ஆணையம் சார்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும், 'சில கூடுதல் ஆவணங்களையும் சரிபார்த்தே முடிவு எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணை இன்றும் தொடர்கிறது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ