உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக காங்கிரஸ் தலைவர் மாற்றம் இல்லை!: மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் உறுதி

கர்நாடக காங்கிரஸ் தலைவர் மாற்றம் இல்லை!: மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் உறுதி

கர்நாடக காங்கிரஸ் தலைவராக, 2020 ஜூலை 2ம் தேதியில் இருந்து, துணை முதல்வர் சிவகுமார் பணியாற்றி வருகிறார். இவரது தலைமையின் கீழ், 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், அவர் முதல்வர் பதவி எதிர்பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை.கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பே, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று கட்சிக்குள் குரல் எழுந்தது.கட்சியின் தேசிய பொது செயலர் வேணுகோபால், 'லோக்சபா தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார்' என்று கூறி இருந்தார்.ஆனால், லோக்சபா தேர்தல் முடிந்தும், சிவகுமார் மாற்றப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர்கள் ராஜண்ணா, சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோருக்கு மாநில தலைவர் பதவி மீது ஆசை வந்துள்ளது.

கட்சியில் குழப்பம்

குறிப்பாக, 2028 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், நான் முதல்வர் ஆவேன் என்று கூறி வரும் சதீஷ், முதல்வர் பதவியை பிடிக்கும் நோக்கில் தலைவர் பதவி மீது கண் வைத்து உள்ளார். ஆனால், தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க சிவகுமாருக்கு மனம் இல்லை.இந்நிலையில், கடந்த சில தினங்களாக மாநில தலைவர் மாற்றம் குறித்து, அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி ஊடகத்தினர் முன்பு பேச ஆரம்பித்தனர். இது, காங்கிரசில் குழப்பத்தை ஏற்படுத்தியது.இதனால் கடும் கோபம் அடைந்த சிவகுமார், 'பதவி, அதிகாரம் கடையில் கிடைக்கும் பொருள் இல்லை. யார், கட்சிக்காக உழைக்கின்றனரோ அவர்களுக்கு எல்லாம் தேடி வரும்' என்று காட்டமாக கூறினார்.இந்நிலையில் பெலகாவியில், வரும் 21ம் தேதி காங்கிரஸ் மாநாடு நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நேற்று பெலகாவி வந்தார்.

காரணம் இல்லை

அவரிடம் தலைவர் மாற்றம் குறித்து, ஊடகத்தினர் கேள்வி எழுப்பினர். அவர் அளித்த பதிலில், ''கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில், தற்போது எந்த மாற்றமும் இல்லை. தலைவர் பதவி தொடர்பாக பேசியதால், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை.''ஆனால், இந்த விஷயத்தில் யார் வதந்தி பரப்புகின்றனர் என்று தெரியவில்லை. அமைச்சர்கள், தலைவர்களுக்கு நோட்டீஸ் வழங்க எந்த காரணமும் இல்லை. பா.ஜ., பொய்களை பரப்பும். யாரும் நம்ப வேண்டாம்,'' என்றார்.இதையடுத்து, நேற்று மாலை பெலகாவியில் காங்கிரஸ் மாநாடு நடத்துவது தொடர்பாக, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய அவர், பெலகாவி மாநாடு தொடர்பாக ஏற்கனவே ஒரு கூட்டம் நடத்தப்பட்டதாக கூறினார். இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், பெலகாவியில் காங்கிரஸ் பவன் கட்ட, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மட்டும் தான் பணம் கொடுத்தார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறினர். இதற்கு காங்கிரசின் இன்னொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், சுர்ஜேவாலா முன்பே இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கார்கே காட்டம்

இதற்கிடையில், பெங்களுரில் நேற்று மாலை, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டியில், ''முதல்வர், மாநில தலைவர் மாற்றம் குறித்து யாரும் பேச வேண்டாம். அனைவருக்கும் நான் கூறுவது ஒன்று தான். வாயை மூடி கொண்டு வேலையை பாருங்கள். தங்கள் இஷ்டத்திற்கு பேசுபவர்கள் முடிவுப்படி கட்சி ஒரு போதும் நடக்காது. ''ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசுகின்றனர். அவர்கள் பேச்சுக்கு என்னால் விளக்கம் அளிக்க முடியாது. என்ன நேரத்தில் என்ன செய்ய வேண்டும். யாரை மாற்ற வேண்டும் என்பது கட்சி மேலிடத்திற்கு தெரியும். நானும், ராகுலும் இருக்கிறோம். எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். அமைச்சர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை ஒழுங்காக பார்க்க வேண்டும்,'' என்றார்.ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மல்லிகார்ஜுன கார்கே பேச்சு மூலம், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சிவகுமார் மாற்றப்பட மாட்டார் என்பது தெளிவாகி உள்ளது. இதனால், சிவகுமார் நிம்மதி அடைந்து உள்ளார். அதே நேரம், அவரது எதிராளிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ