ஒரே குடும்பத்தில் மூவர் கொலை; பீஹாரில் உறவினர் வெறிச்செயல்
பாட்னா : பீஹாரில் 25 வயது பெண்ணை, அவரது மாமனார் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். அப்போது, அருகில் இருந்த அப்பெண்ணின் தந்தை, சகோதரரையும் அவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரில் பேகுசராய் மாவட்டத்தின் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் உமேஷ் யாதவ். இவருக்கு ராஜேஷ் யாதவ் என்ற மகனும், நீலு குமாரி, 25, என்ற மகளும் உள்ளனர்.கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன், இதே மாவட்டத்தில் உள்ள பிஷ்ணுபூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், நீலு குமாரியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார். எனினும், நீலு குமாரியை மணமகனின் பெற்றோர் ஏற்காததால், தன் தந்தை வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் நீலு குமாரி, தன் தந்தை உமேஷ் யாதவ், சகோதரர் ராஜேஷ் ஆகியோருடன் தன் மாமனார் வீட்டிற்கு சென்றார். அப்போது இவர்களை பார்த்ததும் ஆத்திரமடைந்த மாமனார், துப்பாக்கியால் அவர்களை சுட்டுவிட்டு தப்பி ஓடினார். இதில், சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் இறந்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான நீலு குமாரியின் மாமனாரை தேடி வருவதுடன், எதற்காக அவர் மூன்று பேரையும் சுட்டார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.