தொழிற்சாலையில் விபத்து மூவர் மாயம்
புவனேஸ்வர்: ஒடிசாவில் சிமென்ட் தொழிற்சாலையில் உள்ள ராட்சத இரும்பு சாரம் சரிந்து விழுந்ததில், மூன்று தொழிலாளர்கள் மாயமாகினர்.ஒடிசாவில் சுந்தர்கர் மாவட்டத்தின் ராஜ்கங்பூரில் டால்மியா சிமென்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், இத்தொழிற்சாலையில் நிலக்கரியை சேமித்து வைக்கும் ராட்சத இரும்பு சாரம், எதிர்பாராதவிதமாக நேற்று முன்தினம் சரிந்து விழுந்தது. அங்கு பணியாற்றிய 12க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியதாக தகவல் வெளியானது.தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினரின் உதவியுடன் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், பலர் காயங்கள் ஏதுமின்றி மீட்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும், இந்த சம்பவத்தில் மூன்று தொழிலாளர்கள் மாயமானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.