உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூன்று மாடி கட்டடம் இடிந்து ஒருவர் உயிரிழப்பு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

மூன்று மாடி கட்டடம் இடிந்து ஒருவர் உயிரிழப்பு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

புதுடில்லி:சதர் பஜாரில், மெட்ரோ கட்டுமானத் தளம் அருகே, மூன்று மாடிக் கட்டடம் இடிந்து, ஒருவர் உயிரிழந்தார். பலியானவர் குடும்பத்துக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.டில்லி மெட்ரோ ரயில் பாதைக்காக, ஜனக்புரி மேற்கு - ஆர்.கே. ஆசிரமம் இடையே சுரங்கப்பாதை தோண்டும் பணி நடக்கிறது. அருகில் உள்ள கட்டடங்களை காலி செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் நோட்டீஸ் வழங்கி இருந்தது.இந்நிலையில், லோஹியா சவுக், மித்தாய் புல் அருகே, பரா இந்துராவ் பகுதியில், மூன்று மாடி வணிகக் கட்டடம், நேற்று அதிகாலை 2:00 மணிக்கு இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து, தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் வந்தனர். இடிபாடுகளை அகற்றும் பணி மும்முரமாக நடந்தது.இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மனோஜ் சர்மா, 46, மீட்கப்பட்டு இந்து ராவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். கட்டடத்தில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியும் முற்றிலும் சேதம் அடைந்தது.தரை தளம் மற்றும் இரண்டு மாடி கொண்ட கட்டடத்தில், பை மற்றும் கேன்வாஸ் துணிக் கடைகள் அமைந்திருந்தன. இங்கு, சர்மா குல்ஷன் மகாஜன் என்பவர் கடையில், 30 ஆண்டுகளாக மனோஜ் சர்மா பணிபுரிந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இழப்பீடு

டில்லி மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை நிர்வாக இயக்குநர் அனுஜ் தயாள் கூறியதாவது: ஜனக்புரி மேற்கு - ஆர்.கே.ஆசிரம மார்க் வழித்தடத்துக்காக சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் நடக்கும் நிலையில், அந்தப் பகுதியில் உள்ள கட்டட உரிமையாளர்களுக்கு, ஜூன், 12ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கட்டடங்கள் மிகப் பாழடைந்த நிலையில் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலி செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பல கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேறி விட்டனர். ஆனால், தற்போது இடிந்த கட்டடத்தில் மட்டும் காலி செய்யவில்லை. இந்நிலையில் தான், அதிகாலை 2:00 மணிக்கு மூன்று மாடி கட்டடம் இடிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த மனோஜ் சர்மா குடும்பத்துக்கு, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை