இம்பால் :மணிப்பூரில், அரசு அனுமதியின்றி இடங்களின் பெயர்களை மாற்றினால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில், புதிய மசோதாவை அம்மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்றி உள்ளது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இயல்பு நிலை
இங்கு, கடந்த ஆண்டு மே மாத துவக்கத்தில், இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி - கூகி பழங்குடியின பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய - மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பியது.இந்நிலையில் மணிப்பூர் சட்டசபையில், 'மணிப்பூர் இடங்களின் பெயர்கள் மசோதா - 2024' என்ற மசோதாவை தாக்கல் செய்து, அம்மாநில முதல்வர் பைரேன் சிங் பேசியதாவது:கடந்த காலங்களில், சுராசந்த்பூரை லாம்கா என்றும், காங்போக்பியை கங்குய் என்றும் ஒரு சிலர் அழைத்தனர். இதை எளிதாக கடந்துச் செல்ல முடியாது. மாநிலத்தின் வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதில், மணிப்பூர் அரசு உறுதி பூண்டுள்ளது. அரசின் ஒப்புதல் இல்லாமல் இடங்களின் பெயர்களை மறு பெயரிடுவதையும், தவறாக பயன்படுத்துவதையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இந்த புதிய மசோதாவின்படி, இது போன்ற குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த மசோதாவின்படி, மணிப்பூர் அரசின் ஒப்புதல் இல்லாமல் கிராமங்கள் அல்லது இடங்களின் பெயர்களை மாற்றியமைக்கும் நபர்களுக்கு, அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அதிரடி நடவடிக்கை
மேலும், மாநிலத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்க, ஒரு குழு அமைக்கப்படும். மலைகள், ஏரிகள், ஆறுகள், மற்றும் மருத்துவ நிறுவனங்களின் பெயர்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், இந்தக் குழு ஆய்வு செய்யும்.சமீபகாலமாக கூகி மற்றும் மெய்டி சமூகத்தினர், தங்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளின் பெயர்களை தங்களுக்கு சாதகமாக அல்லது தங்களுக்கு வேண்டிய வகையில் மாற்றுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மாநில அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.