உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை சுங்கச்சாவடிகளில் கார், வேன்களுக்கு கட்டணம் ரத்து

மும்பை சுங்கச்சாவடிகளில் கார், வேன்களுக்கு கட்டணம் ரத்து

மும்பை,மும்பை மாநகருக்குள் வருவதற்கான நுழைவாயில்களில் அமைந்துள்ள ஐந்து சுங்கச் சாவடிகளில், கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை மாநில அரசு முழுமையாக ரத்து செய்து உள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநில சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. தேர்தல் தேதிக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது.

ஒப்புதல்

இந்நிலையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், மாநில அமைச்சரவைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தேர்தலை மனதில் வைத்து பல மக்கள் நலத்திட்டங்களுக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதில் மிக முக்கியமானதாக, மும்பை மாநகர எல்லையில் அமைந்துள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் இலகுரக வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.மும்பை மாநகருக்குள் நுழைய தாஹிசார், எல்.பி.எஸ்., ரோடு - முலுந்த், ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே - முலுந்த், ஐரோலி சிற்றோடை பாலம் மற்றும் வாஷி ஆகிய ஐந்து இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டும்.இந்த ஐந்து சுங்கச்சாவடிகளையும் நாள் ஒன்றுக்கு, 3.6 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. சுங்கக் கட்டண வசூல் காரணமாக இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது காலங்காலமாக தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சுங்கக்கட்டணத்தை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், இந்த ஐந்து சுங்கச்சாவடிகள் வழியாக மும்பைக்குள் வந்து செல்லும் இலகுரக வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக, நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சுற்றுச்சூழல் மாசு

“இந்த உத்தரவின் வாயிலாக எரிபொருள், நேரம் மிச்சமாவதுடன், சுற்றுச்சூழல் மாசும் கணிசமாக குறையும்,” என, முதல்வர் ஷிண்டே தெரிவித்தார்.இந்த ஐந்து சுங்கச்சாவடிகளிலும், 45 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை இலகுரக வாகனங்களுக்கு தற்போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டண ரத்து வாயிலாக, நாள் ஒன்றுக்கு 2.8 லட்சம் வாகன ஓட்டிகள் பயன் அடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை