நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது துயரம்; பாம்பு கடித்து ராணுவ வீரர் உயிரிழப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேற்கு சிங்க்பம் உள்ள சரண்டா காடுகளில் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையின் போது பாம்பு கடித்து சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்க்பம் மாவட்டத்தில் உள்ள சரண்டா காடுகளில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசார் உடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.இந்த நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின்போது, பாதுகாப்பு படையின் 'கோப்ரா' பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த சந்தீப் குமார் என்ற வீரரை பாம்பு கடித்தது. பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி சந்தீப் குமார் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இறந்தவரின் உடல் சாலை வழியாக ராஞ்சிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படும். அதன் பிறகு, அவரது உடல் உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.சரண்டா காடுகளில் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது இதற்கு முன்பு பல பாம்பு கடித்த சம்பவங்கள் நடந்துள்ளதாக எஸ்பி தெரிவித்தார். உத்தரபிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த சந்தீப் குமார், 209 கோப்ரா பட்டாலியனில் பணியாற்றியபோது பல நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றார்.