ம.பி.,யில் சோகம்; கூட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்த லாரி தீப்பற்றியதில் இருவர் பலி; பலர் படுகாயம்
போபால்: இந்தூர் விமான நிலைய சாலையில் வேகமாக வந்த ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தின் மீதும், பல வாகனங்களின் மீதும் மோதி தீப்பற்றியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் விமான நிலைய சாலையில் ஒரு மருத்துவமனைக்கு அருகிலுள்ள பரபரப்பான பகுதியில், வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தின் மீதும், பல வாகனங்களின் மீதும் மோதி தீப்பற்றி எரிந்தது. தீயை கட்டுக்குள் கொண்டு வரவும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இந்த சம்பவத்தின் வீடியோக்கள் வைரலானது. பலி அதிகரிக்க வாய்ப்பு
உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.விபத்து குறித்து உள்ளூர்வாசியான சுப்ஷா சோனி கூறுகையில், 'லாரி டிரைவர் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டினார். லாரியின் டயர்கள் தீப்பிடித்து எரிந்தன. என் மைத்துனரின் கால்கள் துண்டிக்கப்பட்டன. அவர் கீதாஞ்சலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்', என்றார்.விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், லாரி பலரையும், வாகனங்களையும் கண்மூடித்தனமாக மோதியது. ஒரு மோட்டார் சைக்கிள் லாரியின் அடியில் சிக்கி, உராய்வு காரணமாக தீப்பிடித்தது. பின்னர் லாரி முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கிவிட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.