கூச் பேஹார்,'மேற்கு வங்கத்துக்குள் நுழைந்துள்ள ராகுலின், 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யில் பங்கேற்க மாட்டோம்' என, திரிணமுல் காங்., தெரிவித்துள்ளது.மணிப்பூர் முதல் மும்பை வரையிலான ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை கடந்த 14ல் துவங்கியது. மணிப்பூர், மேகாலயா, அசாமை கடந்து நேற்று காலை மேற்கு வங்கம் வந்தடைந்தது. கலக்கம்
இங்கு ஐந்து நாள் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல், ஆறு மாவட்டங்களில் உள்ள ஆறு லோக்சபா தொகுதிகளில் 523 கி.மீ., துாரம் பயணிக்க உள்ளார். லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்த அடுத்த நாள், ராகுல் அந்த மாநிலத்திற்கு வந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. ராகுல் யாத்திரை குறித்து சரியான தகவல் தெரிவிக்கப்படாததால், யாத்திரையில் பங்கேற்க போவதில்லை என, திரிணமுல் காங்., தெரிவித்துள்ளது. திரிணமுல் காங்.,கின் இந்த அதிரடி முடிவு காங்., தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.காங்., பொது செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது:பா.ஜ.,வுக்கு எதிரான போரில் தவிர்க்க முடியாதவராக திகழும் மம்தா இல்லாத கூட்டணியை நினைத்துப் பார்க்க முடியவில்லை. பங்கீடு பிரச்னை
பா.ஜ.,வை தோற்கடிக்க மம்தா பானர்ஜி கூட்டணியில் இருக்க வேண்டியது அவசியம். தொகுதிப் பங்கீடு பிரச்னைகளுக்கு தீர்வு காண, காங்., தயாராக உள்ளது. பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையில் பங்கேற்க மம்தா பானர்ஜிக்கு இருமுறை அழைப்பு அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.ஆளும் திரிணமுல் காங்., மூத்த தலைவர் டெரக் ஓ பிரையன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:'இண்டியா' கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நீடிப்பதற்கு, மேற்கு வங்க காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தான் காரணம். இந்த கூட்டணிக்கு நிறைய எதிர்ப்பாளர்கள் இருந்தாலும், பா.ஜ.,வும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் மட்டும் தான் அதை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.இங்கு பேசும் குரல் மட்டும் தான் சவுத்ரி உடையது; வார்த்தைகள் புதுடில்லியில் உள்ள இருவரால் கற்றுத்தரப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, காங்., தலைவர் கார்கே நேற்று முதல்வர் மம்தாவுடன் போனில் பேசினார். இதையடுத்து, கூட்டணி பேச்சில் முன்னேற்றம் ஏற்படும் என, காங்., நம்பிக்கை தெரிவித்துள்ளது.