| ADDED : நவ 21, 2025 12:58 AM
புதுடில்லி:தனியார் நிறுவனத்தின் பணம் கலெக் ஷன் ஏஜன்டிடம் இருந்து, பணத்தை பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த, 18ம் தேதி, வட கிழக்கு டில்லியின் வெல்கம் ஏரியாவில் நடந்தது. ஹிமன்சு என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கலெக் ஷன் ஏஜன்ட், வங்கியில் டிபாசிட் செய்வதற்காக, 4.47 லட்ச ரூபாயுடன், 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அவரை வழி மறித்த, பைக்கில் வந்த இருவர், பணத்தை பறிக்க முயற்சித்தனர். அவர்களிடம் பணப்பையை விட்டுக் கொடுக்காமல் ஹிமன்சு போராடினார். அந்த இடத்தில் இருந்த போலீசார், உடனடியாக வந்து, கொள்ளையடிக்க முயற்சித்தவர்களை பிடிக்க முயன்றனர். எனினும், போலீஸ் பிடியில் இருந்து அவர்கள் தப்பினர். பணத்தை வங்கியில் டிபாசிட் செய்த ஹிமன்சு அளித்த புகாரின் படி, அவரிடம் பணத்தை கொள்ளையடிக்க முயன்றவரை போலீசார் தேடினர். கர்தார் நகரை சேர்ந்த சிவம், 24, மற்றும் அஷுதோஷ் காஸ்யப், 22, ஆகிய இருவரை பிடித்தனர். அவர்கள் இருவரும் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், தாங்கள் தான் பணத்தை கொள்ளையடிக்க முயன்றது என்பதை ஒப்புக் கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார், விசாரிக்கின்றனர்.