உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார், உ.பி.,யில் என்கவுன்டர் ரவுடிகள் இருவர் சுட்டுக்கொலை

பீஹார், உ.பி.,யில் என்கவுன்டர் ரவுடிகள் இருவர் சுட்டுக்கொலை

மீரட்: உத்தர பிரதேசம் மற்றும் பீஹாரில் போலீசார் நடத்திய என்கவுன்டரில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இரண்டு ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.டில்லியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஹாசிம் பாபாவின் நெருங்கிய கூட்டாளி சோனு மட்கா, 39. இவர் மீது, டில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன.டில்லி பார்ஸ் பஜார் பகுதியில் கடந்த தீபாவளி நாளில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த ஆகாஷ் சர்மா, மற்றும் அவரது மருமகன் ரிஷாப் ஆகியோரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். இவர்களை கொன்றவர்களில் ஒருவர் ரவுடி மட்கா என தெரியவந்துள்ளது.போலீசாரால் தேடப்பட்டு வந்த இவர், தலைமறைவாக இருந்தார். இவரை கண்டுபிடித்து தருவோருக்கு 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், உ.பி., யின் மீரட் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மட்காவை போலீசார் நேற்று தடுத்து நிறுத்த முயன்றனர். அவர் நிற்க மறுத்ததுடன், போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டார்.தற்காப்புக்காக போலீசாரும், ரவுடி மட்காவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த மட்கா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பீஹாரிலும்...

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அஜய் ராய். இவர் மீது, பீஹார் மற்றும் ஹரியானாவில் வங்கி கொள்ளை வழக்கு உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருந்த இவர், பாட்னா மாவட்டம் ஜக்கன்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிரடிப்படை போலீசார் கடந்த 12ம் தேதி இரவு அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு பதுங்கியிருந்த அஜய் ராய் கூட்டாளிகள், போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் நடத்திய தாக்குதலில், ரவுடி அஜய் ராய் காயம் அடைந்தார். எஸ்.ஐ., ஒருவரும் குண்டு காயம் அடைந்தார்.இதையடுத்து அருகே யுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவுடி அஜய் ராய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயம் அடைந்த எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ