உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு

பஞ்சாபில் அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு

மொஹாலி : பஞ்சாபில், நான்கு மாடிகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து விழுந்த விபத்தில் இருவர் பலியாகினர். பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்தில் உள்ள சோஹானா பகுதியில், சாஹிப்சாதா அஜித்சிங் நகர் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள நான்கு மாடி குடியிருப்பு, நேற்று முன்தினம் மாலை திடீரென பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது. அதில் வசித்து வந்த பலர், இடிபாடுகளில் சிக்கினர். பல மணி நேரப் போராட்டத்துக்கு பின் இருவரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.

இரவு - பகலாக மீட்பு

படுகாயங்களுடன் போராடிய ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த திருஷ்டி வர்மா என்ற இளம்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இறந்த மற்றொருவரின் உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்பது குறித்த விபரங்கள் சரிவர தெரியவில்லை. ஆகையால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. போலீசார், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டட குவியல்களுக்கு நடுவே உள்ளவர்களை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, ராணுவ வீரர்கள் உதவியுடன் இரவு - பகலாக மீட்புப் பணி நடந்து வருகிறது. தங்கள் உறவினர்கள் யாரேனும் சிக்கியிருந்தால், தொடர்பு கொள்ள உதவி எண்ணும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

முதற்கட்ட விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பு அருகே ராட்சத இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டியதை அடுத்து, கட்டடம் இடிந்து விழுந்தது தெரியவந்துள்ளது. கட்டட உரிமையாளர்கள் பர்வீந்தர் சிங், ககன்தீப் சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த முதல்வர் பகவந்த் மான், 'கட்டடம் இடிந்து விழுந்ததற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி