பள்ளி முன் குண்டு வெடித்து மாணவன் உட்பட இருவர் காயம்
பாலக்காடு: கேரளாவில் பள்ளி முன் வெடிபொருள் வெடித்ததில், மாணவன் மற்றும் மூதாட்டி என இருவர் காயமடைந்தனர். கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்கந்தரா பகுதியில் வியாச வித்யா பீடம் பள்ளி அமைந்துள்ளது. வழக்கம்போல், நேற்று முன்தினம் பள்ளி இயங்கிய நிலையில் ஏராளமான மாணவர்கள் வந்திருந்தனர். மாலை 3:45 மணிக்கு, பள்ளியில் இருந்து மாணவர்கள் வீடு திரும்பத் துவங்கினர். அப்போது, நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர் நாராயணன், வெளியே வரும்போது, வாசல் அருகே வாளியில் மர்ம பொருட்கள் இருந்ததை கண்டார். அதில், ஒன்றை எடுத்து, தரையில் வீசியதில் பயங்கர சத்தத்துடன் அது வெடித்தது. இதில், நாராயணன் மற்றும் அவ்வழியாக சென்ற மூதாட்டி படுகாயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்-. குண்டு வெடித்ததால், பள்ளியைச் சுற்றிய பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பெற்றோரும், அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அங்கு குவிந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வாளியில் வைக்கப்பட்டிருந்த நான்கு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். விசாரணையில், காட்டுப் பன்றிகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகள் என தெரியவந்துள்ளது. இருப்பினும், பள்ளி அருகே இவற்றை கொண்டு வந்து வைத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சதி இருப்பதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது. பள்ளி நிர்வாகத்துக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும், அங்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றம் சாட்டியுள்ளது. பள்ளியில் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என, காங்கிரஸ் வலியுறுத்திஉள்ளது.