மீண்டும் இருளில் மூழ்கும் உ.பி., கிராமங்கள்; மின்துறை அமைச்சரால் முதல்வர் யோகிக்கு சிக்கல்
உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சியை பிடிப்பதற்கான பிரகாசமான வாய்ப்பை மின்வெட்டு பிரச்னை, மங்க வைத்திருக்கிறது. அம்மாநிலத்தில் தற்போது நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டே இதற்கு முக்கிய காரணம். அதுவும் 24 மணி நேரம் வரை கூட சில கிராமங்கள் இருளில் மூழ்கியிருப்பது, யோகி அரசுக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மிக முக்கியமான சூத்திரதாரியே அம்மாநிலத்தின் மின்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தான். இத்தனைக்கும் இவர் பிரதமர் மோடியிடம் நல்ல பெயர் எடுத்தவர். குஜராத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர். 2014ல் பிரதமராக மோடி பதவியேற்றதும், மத்திய அரசுப் பணிக்காக அவரை டில்லிக்கு அழைத்து வந்தார். அங்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் செயலராகவும் பதவி வகித்தார். அதன் பின் 2021ல் ஆனந்த் சர்மா ஓய்வு பெற்றதும், உ.பி.,யில் இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அமர்ந்தபோது, அவரது அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக்கப்பட்டார். மின்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. எம்.எல்.சி., வழியாக ஆனந்த் சர்மா அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னணியில் பிரதமர் மோடியின் தலையீடும் இருப்பதாக கூறப்படுகிறது. பூதாகரமான மின்வெட்டு
அதிகாரியாக சிறப்பாக செயல்பட்ட ஆனந்த் சர்மா, அமைச்சராக கடமையாற்றுவதில் கோட்டை விட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும். கடந்த மாதம் சுல்தான்பூர் மாவட்டத்திற்கு சென்ற அமைச்சரிடம், அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்னையை பொதுமக்கள் எழுப்பி இருக்கின்றனர். நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதாக கூறி, தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை விளக்கினர். விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அவர் சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், அப்படி எதையும் அவர் பேசவில்லை. ''ஜெய் ஸ்ரீராம், ஜெய் பஜ்ரங் பலி,'' என பக்தி முழக்கம் எழுப்பிவிட்டு, சர்வசாதாரணமாக காரில் ஏறி அங்கிருந்து கடந்து சென்றுவிட்டார். அந்த வீடியோ வைரலாக, பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிய அமைச்சர், இப்படி பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்வதா என ஒட்டுமொத்த மாநில மக்களும் கொந்தளித்து விட்டனர். அதன் விளைவாக யோகியின் ஆட்சி மீதே தற்போது மக்களுக்கு அதிருப்தி உருவாக முக்கிய காரணியாகி இருக்கிறது. மின்வெட்டு பிரச்னை சுல்தான்பூர் மாவட்டம் என்று இல்லை, ஒட்டுமொத்த உத்தர பிரதேசத்திலும் தீராத தலை வலியாக உருவெடுத்து உள்ளது. இதனால், நொய்டா போன்ற தொழில் நகரங்கள் மின்வெட்டால் நொடிய ஆரம்பித்திருக்கின்றன. மக்களிடம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை நீக்குவதற்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார். அறிவிக்கப்படாத மின்தடை, அளவுக்கு அதிகமான கட்டணம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏன் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து, தீர்வு காணுமாறு அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தி இருக்கிறார். ''நுகர்வோர், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைவருக்கும் தங்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதை அரசு உறுதி செய்யும். மாநிலத்தில் போதிய அளவுக்கு மின் உற்பத்தி நடந்து வருகிறது'' என தன் சமூக வலைதளத்தில் யோகி பதிவிட்டிருந்தார். பிரச்னை எப்போது?
யோகி ஆதித்யநாத் 2017ல் முதல்முறையாக முதல்வரான போது மாநிலத்தில் பல மணி நேரம் வரை மின்வெட்டு நிலவியது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண மின் உற்பத்தியை அவர் அதிகரிக்க செய்தார். அதற்கேற்றபடி அப்போது மின்துறை அமைச்சராக இருந்த ஸ்ரீகாந்த் சர்மாவும் சுறுசுறுப்பாக செயல்பட்டார். ஆனால், 2022ல் யோகி இரண்டாவது முறையாக பதவியேற்றதும், மின் துறை அமைச்சர் மாற்றப்பட்டார். ஸ்ரீகாந்த் சர்மாவுக்கு பதில் ஆனந்த் சர்மா பதவிக்கு வந்தார். அதன் பிறகே, மின்வெட்டு பிரச்னை பூதாகரமாக எழுந்ததாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 2017ல் 11,800 மெகாவாட் மின் உற்பத்தி செய்தபோது, மின்தேவையின் அளவு 13,000 மெகாவாட். ஆனால், 2025ல் 30,000 மெகாவாட் என தேவை இருமடங்காக உயர்ந்திருக்கிறது. மின் உற்பத்தியோ 20,000 மெகாவாட்டாக இருக்கிறது. இதனால், மின்தேவையை பூர்த்தி செய்வதில் மின்வாரியம் தள்ளாடுகிறது. நகரமயமாக்கல், தொழில்துறைகள் அதிகரிப்பு ஆகியவையும் தேவை அதிகரிக்க காரணம். வளர்ச்சி மாநிலத்திற்கு அவசியம். அதற்கேற்றபடி மின் உற்பத்தியும் பெருகி இருக்க வேண்டும். செயல்படாத அமைச்சர்
மின் துறையுடன், நகர்ப்புற வளர்ச்சி இலாகாவையும் சர்மா தன் வசம் வைத்திருக்கிறார். தற்போது இந்த துறையும் சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக தலைநகர் லக்னோவில் கழிவு மேலாண்மை மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்களே விமர்சிக்கின்றனர். அதிலும், தெருவிளக்குகள் அமைப்பது, மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவது போன்ற பணிகளிலும் மிகுந்த தொய்வு காணப்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்படி இரண்டு துறைகளும் முடங்கி இருப்பதால், ஆனந்த் சர்மா, அமைச்சராக பதவி வகிக்க தகுதியில்லாதவர் என்ற பேச்சும் வலுவாக எழுந்திருக்கிறது. தற்போது உத்தர பிரதேச பா.ஜ.,வில் கட்சி ரீதியிலான மாற்றங்கள் நடக்கப் போகின்றன. மாநிலத் தலைவர் புதிதாக தேர்வாகவுள்ளார். அதன் பின் அமைச்சரவையிலும் மாற்றம் நிகழப் போகிறது. அப்போது ஆனந்த் சர்மாவை நீக்க, யோகி ஆதித்யநாத் காய்களை நகர்த்த வேண்டும். அந்த வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டால், அடுத்து வரும் சட்டசபை தேர்தலின்போது அதற்காக அவர் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.