| ADDED : மார் 17, 2025 12:29 AM
டேராடூன்: மலைவாழ் மக்களை இழிவுபடுத்தும் வகையில், சட்டசபையில் பேசி சர்ச்சையில் சிக்கிய உத்தரகண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால், கடும் எதிர்ப்பு காரணமாக, நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அதில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் நடந்த விவாதத்தில், நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் பேசினார்.அப்போது, 'உத்தரகண்ட் என்ன மலைவாழ் மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதா?' என கேள்வி எழுப்பினார். அவரது இந்த பேச்சு, மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சருக்கு எதிராக மலைவாழ் மக்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால், தன் கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். பா.ஜ., தலைமை அவரை அழைத்து சர்ச்சையாக பேசுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தியது. இந்நிலையில், முதல்வர் புஷ்கர் சிங் தாமியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்த பிரேம்சந்த், தன் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இது குறித்து பேசிய அவர், “உத்தரகண்ட் தனி மாநில போராட்டத்தில் பங்கேற்று வழக்குகளை சந்தித்தவன் நான். இன்று, எனக்கு எதிரான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.