| ADDED : ஆக 29, 2025 06:36 AM
புதுடில்லி: தேவை அதிகரித்துள்ளதை அடுத்து சென்னை எழும்பூர் - திருநெல்வேலி உட்பட, ஏழு வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. மங்களூரு சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல், செகந்திராபாத் - திருப்பதி, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, மதுரை - பெங்களூரு கன்டோன்ட்மென்ட், தியோகர் - வாரணாசி, ஹவுரா - ரூர்கேலா, இந்துார் - நாக்பூர் ஆகிய ஏழு வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், எட்டு பெட்டிகளுடன் நான்கு வழித்தடங்களிலும், 16 பெட்டிகளுடன் மூன்று வழித்தடங்களிலும் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஏழு வழித்தடங்களில் அதிகம் பேர் பயணிப்பதை தொடர்ந்து இந்த தடங்களில் பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ரயில்வே தகவல் தொடர்பு நிர்வாக இயக்குநர் திலிப் குமார் நேற்று கூறியதாவது: கடந்த ஜூலை 31 வரையிலான காலத்தில் தேவை அதிகம் இருந்ததை கருத்தில் வைத்து, 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் மூன்று வந்தே பாரத் ரயில்களை, 20 பெட்டிகளாக அதிகரித்தும், எட்டு பெட்டிகளுடன் கூடிய நான்கு ரயில்கள், 16 பெட்டிகளாகவும் அதிகரிக்கப்படும். தற்போது இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் பழைய ரயில்கள் இனி வேறு வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்படும். புதிய திட்டப்படி மங்களூரு சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் , செகந்திரபாத் - திருப்பதி, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ஆகிய மூன்று வழித்தடங்களில், 20 பெட்டிகள் அடங்கிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். மற்ற நான்கு வழித்தடங்களில், 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். இது தவிர, 20 பெட்டிகள் உடைய மேலும் சில வந்தே பாரத் ரயில்கள் இயக்க தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.