| ADDED : டிச 08, 2025 12:43 PM
புதுடில்லி: வரும் 2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் ஊக்குவிக்கும் என்று லோக்சபாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்து இன்று லோக்சபாவில் சிறப்பு விவாதம் தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசியதாவது; வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா விவாதத்தில் பங்கேற்பது பெருமை. இது வரலாற்று சிறப்பு மிக்க தருணம். வந்தே மாதரம் விவகாரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றெல்லாம். ஏதுமில்லை. வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திர போராட்டத்தினால் நாம் இன்று சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம். வந்தே மாதரம் என்பது வெறும் சுதந்திரப் போராட்டத்திற்கான முழக்கம் அல்ல. சுதந்திர தாய்க்கான பாடல். அனைத்து இந்தியர்களின் நம்பிக்கை.வந்தே மாதரம் பல கட்டங்களை கடந்து வந்துள்ளது. வந்தே மாதரத்தை பிரிட்டன் மகாராணி வாழ்க என்று பாட வைக்க ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பலம் வாய்ந்த பிரிட்டனை எதிர்க்க 1875ம் ஆண்டு பங்கிம் சாட்டர்ஜி, வந்தே மாதரம் பாடலை கொடுத்தார். 2047ல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவாக, வந்தே மாதரம் நம்மை ஊக்குவிக்கும். வந்தே மாதரம் இயற்றப்பட்ட போது, நாடு அடிமைச்சங்கிலியில் சிக்கி இருந்தது. நாடு அடிமைப்பட்டு இருந்தது நமது வரலாற்றில் கருப்பு அத்தியாயம். இந்த விவாதத்தின் மூலம், எதிர்கால தலைமுறையினர் வந்தே மாதரம் குறித்து அறிந்து கொள்ள முடியும். எதிர்பார்பாராத விதமாக, வந்தே மாதரத்தின் 100ம் ஆண்டில் அவசரநிலையை சந்தித்தோம், இவ்வாறு அவர் கூறினார்.