உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரணடைய விக்ரம் கவுடா மறுப்பு? ஆடியோ வெளியாகி பரபரப்பு!

சரணடைய விக்ரம் கவுடா மறுப்பு? ஆடியோ வெளியாகி பரபரப்பு!

உடுப்பி: நக்சல் ஒழிப்புப் படையினரால் என்கவுன்டர் செய்யப்பட்ட, நக்சல் இயக்க தலைவர் விக்ரம் கவுடா சரணடைய மறுத்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உடுப்பி மாவட்டம், கார்கலா ஹெப்ரி வனப்பகுதியில், கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி நக்சல் இயக்க தலைவர் விக்ரம் கவுடாவை, நக்சல் ஒழிப்புப் படையினர் என்கவுன்டர் செய்தனர். இதற்கு பல முற்போக்கு சிந்தனையாளர்கள், பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.'விக்ரம் கவுடா சரணடைய, அரசு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும். என்கவுன்டர் செய்தது சரி இல்லை' என, அவர்கள் குற்றஞ்சாட்டினர். விக்ரம் கவுடாவுடன் நக்சல் இயக்கத்தில் ஈடுபட்ட அவரது 2வது மனைவி சுந்தரி உட்பட, ஆறு நக்சல்கள் முதல்வர் சித்தராமையா முன் கடந்த 8ம் தேதி சரணடைந்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், நக்சல் நடவடிக்கையில் இருந்து வெளியே வரும்படி, விக்ரம் கவுடாவிடம் முன்னாள் நக்சல் பேசியதாக கூறப்படும், மொபைல் போன் ஆடியோ உரையாடல் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அந்த ஆடியோவில் விக்ரம் கவுடா, 'மக்களுக்காக போராட்டம் நடத்துகிறோம். போராட்டத்தில் இருந்து பின்நோக்கி வந்தால், எங்களை நம்பி உள்ள மக்களை ஏமாற்றுவது போல் ஆகிவிடும். எங்களை எதற்காக பேச்சுக்கு அழைக்கின்றனர்? நாங்கள் ஏன் சரண் அடைய வேண்டும்?'வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியே வரும்போது, அதற்கு உயிர் கொடுக்க தாய் எவ்வளவு கஷ்டப்படுகிறாரோ, அதுபோல மக்கள் படும் கஷ்டத்தை தீர்க்க நாங்களும் பல கஷ்டங்களை அனுபவிக்கிறோம். ஒருவேளை நாங்கள் சரணடைந்த பின், தேர்தலில் நின்று உங்களுக்கு நல்லது செய்கிறோம் என்றால் மக்கள் நம்புவார்களா? போராட்டக்காரர்கள் என்று பெயர் வாங்கி உள்ளோம். எங்கள் போராட்டம் தொடரும். சரண் அடைய மாட்டோம்' என்று கூறுகிறார்.'அவர் சரணடைய மறுத்ததால் தான் சுட்டு கொல்லப்பட்டாரா' எனவும், பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !