சென்னை: அரசு ஊழியர்களுக்கான கட்டண தள்ளுபடியை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தராமல் இழுத்தடிப்பது, அரசு ஊழியர்கள் இடையே, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியார் டெலிகாம் நிறுவனங்களை காட்டிலும் குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கி வருகிறது. இருப்பினும் பழைய உள்கட்டமைப்புடன் கூடிய 'டவர், 'நெட்வொர்க்' பிரச்னை போன்றவற்றால் திண்டாடி வருகிறது.பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில் மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கென சிறப்பு சலுகை திட்டம் உள்ளது.இதில் 'லேண்ட்லைன்' மற்றும் 'வைபை' வசதிகளை பெற முடியும். கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. இதை பெறுவதற்கு, அரசு ஊழியர்கள் தங்கள் துறை அடையாள அட்டையை வைத்து விண்ணப்பிக்கலாம்.சமீப நாட்களாக, புதிதாக இந்த திட்டத்தில் இணைவோருக்கு சலுகைகள் கிடைப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, அரசு பள்ளியில் பணிபுரியும் உதவி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:புதிய இணைப்பு பெற, கடந்த ஆண்டு நவ., மாதம், சென்னை கெல்லீஸ் சாலையில் உள்ள, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையம் சென்று, பதிவு செய்தேன். சேவை இணைப்பு கிடைத்து, அடுத்த மாதம் கட்டணத்திற்கான பில் வந்தது.அதில் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட சென்னை பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகத்தில் கேட்ட போது, முறையான பதில் வரவில்லை. ஒன்பது மாதம் கடந்தும் தீர்வு கிடைக்கவில்லை.சி.ஜி.எம்., அலுவலகத்துக்கு செல்லுங்கள் எனக் கூறி அலையவிடுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னாள் டெலிகாம் ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியபாலன் கூறுகையில், ''வாடிக்கையாளர்கள் மற்றும் அதிகாரிகள் பயன்பெறும் வகையில், பல சலுகைகளை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிவிக்கிறது. இதை அதிகாரிகள் வெளியில் சொல்வதில்லை.''தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் சுற்றறிக்கைகளை கூட, தமிழக பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் பார்ப்பதில்லை. சேவைகள் சரியாக கிடைக்காமல் போவதற்கு, அதிகாரிகளின் மெத்தனமே காரணம்,'' என்றார்.