பூஜ்யத்தில் இருந்து பணிகளை துவக்கியுள்ளோம்
பிரகதி விஹார்:“முந்தைய ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் வடிகால்களில் வண்டல் மண் அகற்றும் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எங்கள் அரசு, பூஜ்யத்தில் இருந்து தொடங்கி, பணிகளை முடிக்க வேண்டியுள்ளது,” என, முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.இரண்டு நாட்களுக்கு முன்பு தெற்கு டில்லியில் உள்ள சுனேஹ்ரி புல் வடிகாலில் நேற்று துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா, முதல்வர் ரேகா குப்தா, பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா ஆய்வு மேற்கொண்டனர்.வடிகால்கள் அனைத்தும் அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு துார்வாரப்பட்டு வருகின்றன.மழைக்காலத்தில் நகரில் வெள்ளம் தேங்குவதைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புதிய அரசு முடுக்கிவிட்டுள்ளது.ஆய்வுக்குப் பின் முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:முந்தைய ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் வடிகால்களில் வண்டல் மண் அகற்றும் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எங்கள் அரசு, பூஜ்யத்தில் இருந்து தொடங்கி, பணிகளை முடிக்க வேண்டியுள்ளது.தேசிய தலைநகரில் உள்ள அனைத்து வடிகால்களிலும் வண்டல் மண் அகற்றப்படுவதை பா.ஜ., அரசு உறுதி செய்யும். மழைக்காலத்தில் வெள்ளம் தேங்குவதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும்.குடிநீர் விநியோகிக்கும் வலை அமைப்பு முற்றிலும் சிதைந்துள்ளது. பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு டேங்கர்களில் தண்ணீர் விநியோகிக்கும் நிலை உள்ளது. குழாய்களில் தண்ணீர் விநியோகிக்கும் வலையமைப்பு உருவாக்கப்படும்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.,வின் இரட்டை இயந்திர அரசுகள், நகருக்குத் தேவையான அனைத்தையும் செய்து முடிப்பதில் உறுதியாக உள்ளது. இதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது, எம்.பி., பன்சூரி ஸ்வராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
'படகு சவாரி விரும்புகிறாரோ?'
பட்பர்கஞ்ச் பகுதியில் தண்ணீர் தேங்கிய தெருக்களைக் காட்டும் ஒரு பயனாளரின் வீடியோவை பகிர்ந்து, தன் 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்து ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் பட்பர் கஞ்ச் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள பதிவு: ட்பர்கஞ்ச் தொகுதியின் புதிய எம்.எல்.ஏ., ரவி, தெருக்களில் படகு சவாரியை விரும்புபவர் போல. அதனால் தான் தெருக்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது. ஒருவேளை இது, யமுனையை சுத்தம் செய்யும் புதிய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். தெருக்களில் உள்ள அனைத்து கழிவுநீர் அமைப்புகளையும் நிறுத்துங்கள். யமுனைக்கு கழிவுநீர் செல்லவில்லை என்றால், அது தானாகவே சுத்தமாகி விடும்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.மணீஷ் சிசோடியாவின் பதிவுக்கு முதல்வர் ரேகா குப்தா பதிலடி கொடுத்துள்ளார். “தீர்வுகளைக் கண்டுபிடிக்க நாங்கள் களத்தில் இருக்கிறோம். நாங்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் மட்டும் நின்றுவிடவில்லை. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துகிறோம்,” என, முதல்வர் கூறியுள்ளார்.இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக மணீஷ் சிசோடியா இருந்த போது, தற்போதைய பா.ஜ., - எம்.எல்.ஏ.,வான ரவி நேகி, படகில் சவாரி செய்து, அப்போதைய ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.